திருவரசு புத்தக நிலையம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 196 )
"அண்மையில் உலகத்திற்கு எல்லாம் சத்தியாக்கிரகப் பெருநெறி காட்டி வாழ்ந்த மகாத்மா காந்தியைப் போல், காவிய உலகில் தமிழருக்குப் பெருவழி காட்டும் லட்சியம் ஒன்றை அல்லவா கம்பன் படைத்துக் காட்டுகிறான்" (பக்.6) என்று பி.ஷ்ரீ.ஆசார்யாவின் மதிப்பீட்டின் வாயிலாக கம்பனின் இராம காதையை 10 கட்டுரைகளில் மதிப்பீடு செய்துள்ளார் நூலாசிரியர்.
"வேந்தர், வேதியர், மேலுளோர், கீழளோர் விருப்பப் /போந்த புண்ணியன்" அறத்தைப் போற்றிய அண்ணல் என வீடணனைப் புகழ்ந்து, அறத்தை உணர்ந்து தந்தைக்கே அறிவுரை கூறும் தனிப் பெரும் தனயனாய் விளங்கிய இந்திரசித்தனை "அமரர் தங்கள் கூற்றே" வாழ்க என வாழ்த்துப்பா பாடியுள்ளது புதுமை.
"இப்பாவை தோன்றலால் / அழகு எனும் அழகும் ஓர் அழகு பெற்றதே" என சீதையும், "ஐயோ! இவன் வடிவு என்பதோர் அழியா அழகுடையான்" என இராம பிரானையும், அழகியலில் விவரிக்கும் நூலாசிரியர், அரசியல் பற்றி கூறும்போது, "இராமவதாரக் கதைப் பகுதி மூன்று பேரரசுகளை விளக்கி நிற்கின்றது. ஒன்று "அறமூர்த்தி அண்ணன்" தயரதன் ஆட்சி புரியும் அரசு, மற்றொன்று இராவணன் ஆளும் இலங்கைப் பேரரசு, மூன்றாவது ஆற்றலில் திறம் வாய்ந்த வாலி ஆளும் கிட்கிந்தை அரசு" என அற்புதமாகச் சிந்தனை செய்து, மனித உரிமைகளைப் போற்றும் மாண்புடை அரசை நம் முன் காட்டுகின்றார் நூலாசிரியர்.
கையால் அபயம் கொடுத்தும், காலால் உதைத்து வீழ்த்தும் இயல்புக்கு மாறாக, கையால் (தாடகையை) அழித்தும், காலால் அருள் (அகலிகை) செய்தும் அற்புதம் நிகழ்த்தியதை "கம்பர் கூறிய கால் வண்ணத்தின் எதிரொலிகள்" கட்டுரையில் நயம்பட உரைத்துள்ளார் நூலாசிரியர்.
இராமகாதையின்பால் நூலாசிரியருக்குள்ள பக்தியும், ஆழ்ந்த பிடிப்பும் நூல் முழுவதும் விரவிக் கிடக்கின்றன. கம்பனின் சிந்தனையோடு தனது சிந்தனைகளையும் இழைத்துச் சுவையுடன் படைத்துள்ளார் நூலாசிரியர்.