உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாவது முதன்மைச் சாலை, சி.ஐ.டி., வளாகம், தரமணி, சென்னை-600 113. (பக்கம்: 400.)
பரம்பரை சித்த மருத்துவ குடும்பத்தைச் சேர்ந்த மருத்துவர் ஆனைவாரி ஆனந்தன், சித்த மருத்துவ வரலாறு எனும் இந்நூலில் உலகின் தொன்மை நாகரிகங்கள் தொடங்கி, உலகின் பாரம்பரிய மருத்துவ முறைகள், இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகள், தமிழ் மருத்துவ வரலாறு,
சித்த மருத்துவ வளர்ச்சி, சித்தர்களின் வரலாறு, சித்த மருத்துவத்தின் தனித்தன்மை, இன்றைய சித்த மருத்துவச் செல்நெறி எனும் தலைப்புகளில் விரிவான கட்டுரைகளைத் தந்துள்ளார்.
""வேதகாலத்திற்கு முந்தைய நாகரிகத்தைச் சேர்ந்த தாந்திரீக மரபின் கடவுளான ருத்ரன் எனும் சிவனே மானிட குலத்தின் முதல் மருத்துவன் என்பது ரிக் வேதத்திலேயே கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து திராவிடர்களின் நாகரிகத்தில் இருந்து கிளைத்ததே ஆயுள் வேதம் என்பது வெள்ளிடை மலையாகும்'' (பக்.64) எனும் நூலாசிரியர்,
""ஆயுர்வேதத்தை அடிப்படையாகக் கொண்டே யுனானி மருத்துவம் உருவாக்கப்பட்டுள்ளது என்ற பகதூர் ஜனாப் ஹக்கீம் அஜ்மல் கானின் கூற்றினையும் குறிப்பிட்டுள்ளார் (பக்.71).
தொன்மைத் தமிழ்ப் பண்பாட்டின் பிழிவாக கிராமங்களில் வழங்கி வரும் மருத்துவப் பழமொழிகள் (பக்.392-395) மூலம் தமிழ் மருந்தின் தொன்மை குறித்து விளக்கும் நூலாசிரியர், இந்தியாவிற்கு வந்து சென்ற பித்த கோரஸ் மூலமே இந்திய மருத்துவம் கிரேக்கத்தில் பரவியது.
இப்போகிரேட்டஸ் குறிப்பிடும் இந்திய மருந்துகள் (மிளகு) தமிழ் மருந்துகளே (பக்.298) என்றும் குறிப்
பிடுகிறார்.
இந்நூலின் பின்னிணைப்புகளில் உள்ள தகவல்கள் அனைவருக்கும் பயனுள்ளவை.
இன்று வரை உலக சுகாதார நிறுவனம் சித்த மருத்துவத்தைத் தனித்துவமான ஒரு மருத்துவ முறையாக
அங்கீகரிக்கவில்லை என்று வேதனைப் பட்டுள்ள நூலாசிரியர் இந்நூல் அத்தகைய முயற்சிக்கு வழிவகுக்க பயன்படும்.
சித்த மருத்துவம் பயிலும் மாணவர்களுக்குப் பாட நூலாக, வழிகாட்டி நூலாக பயனுள்ள ஒரு நூலினை
அரிய ஆய்வு மூலம் தந்துள்ள நூலாசிரியரின் பணி பாராட்டுக்குரியதாகும்.