பொதிகை பொருநை கரிசல் கட்டளை, திருவான்மியூர், சென்னை-41. (பக்கம்: 200).
தமிழுணர்வுக்கும், தேசிய உணர்வுக்கும், ஆன்மிக உணர்வுக்கும் ஒட்டு மொத்த புண்ணிய பூமி-யாக விளங்கும் வளம் நிறைந்த நெல்லை மாவட்டத்தின் அருமை பெருமைகளை இந்நூலில் சேகரித்துத் தந்துள்ளார் நூலாசிரியர்.
சங்க இலக்கியங்களில் தொடங்கி, ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி என்று வரலாற்றுத் தொன்மையும், சைவம், வைணவம், கிறிஸ்தவம், சீறாப்புராணம் எழுதிய உமறுப்புலவர் என மத நல்லிணக்கத்தில் நெல்லையின் பங்கையும், பூலித்தேவன், கட்டபொம்மன், சுந்தரலிங்கம், தேசியக்கவி பாரதி, இந்தியாவிலேயே முதன் முதலில் தொழிற்சங்கம் கண்ட கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி., நாடகத் துறையின் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள், சிறுகதை பிதாமகன் புதுமைபித்தன், தேவநேயப் பாவாணர், தொ.மு.சி.ரகுநாதன் இப்படி ஏராளமான அரசியல், இலக்கியவாதிகளின் பிறப்பிடம் நெல்லை என்று தேசிய அரசியல் போராட்டத்தில் நெல்லையின் பங்கையும்,
பாஞ்சாலங்குறிச்சி போர், கட்டபொம்மு செப்பேடு, ஆஷ் கொலை வழக்கு போன்ற செய்திகள் மூலம் நீதித்துறையில் நெல்லையின் பங்கையும் படைத்துள்ளார். நூலுக்கு பொருளடக்கம் தந்து, ஒவ்வொரு கட்டுரையையும் சரியாகத் தலைப்பிட்டு ஒவ்வொரு பிற்சேர்க்கைக்கும் உரிய பொருத்தமான குறிப்புகளைத் தந்திருந்தால் இன்னும் நூல் வடிவம் நிறைவாக இருக்கும்.