Publishers : Maritime History Society, Mumbai- 400 005. (Page : 109)
சோழா நேவிகேஷன் பேக்கேஜ்' என்ற இந்த ஆங்கில நூல் மும்பைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் புவியியல் பேராசிரியர் பி.அருணாசலம் என்பவரால் எழுதப்பட்டு, "மாரி டைம் ஹிஸ்டரி சொசைட்டி' என்ற நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் மேற்கு கடற்படைக் கமாண்டின் கீழ் செயல்படுகிறது. 1978ல் நிறுவப்பட்ட இந்த நிறுவனத்தின் குறிக்கோள், இந்தியக் கடல் வழி செயல்பாடுகளைப் பற்றி ஆராய்ந்து, சிறந்த ஆசிரியர்கள் மூலம் அவற்றைப் பதிப்பிப்பது தான். இந்த சீரிய முயற்சிக்காகவே இந்த நிறுவனம் பாராட்டப்பட வேண்டியதாகும்.அவ்வகையில் எழுதப்பட்ட நூல்களில் இந்த நூல் ஆறாவது ஆகும். ஆசிரியர் அருணாசலம். நாற்பது ஆண்டுகள் புவியியல் ஆசிரியராகப் பணியாற்றியவர். கடலைப் பற்றியும், கடற்கரை பற்றியும், கப்பல் செலுத்தும் மாலுமிகளின் திறமை பற்றியும் பல ஆராய்ச்சிகளைச் செய்தவர். ஆகையால் இந்த நூல் சிறப்பாக அமைந்துள்ளது என்பதில் ஆச்சரியமில்லை.
ஆனால், இப்படைப்பின் மூலம் கடல் வழி செல்லுகையில் பயன்படுத்தப்பட்ட சோழர் காலத்தியக் கருவிகளைக் குறித்து, ஆய்வுகள் செய்து அதைச் சாதாரண மனிதர்கள் புரிந்து கொள்ளும்படியாக விளக்கியிருப்பது தான் இந்த நூலின் சிறப்பு அம்சம். அது ஆசிரியரின் திறமையைக் காட்டுகிறது.
எட்டு அத்தியாயங்களில், கருவிகளை பற்றியும், சோழர் காலத்து கப்பலோட்டும் திறமையைப் பற்றியும் விரிவாக எழுதியுள்ளார். இவற்றில் அக்கால சில விஞ்ஞான முறைகள் கணித, வரைபட மூலமாக விளக்கப்பட்டிருப்பது மற்றொரு சிறப்பு. தமிழகத்துக்குப் பழைய துறைமுகங்கள் வரைபடங்களுடன் விளக்கப்பட்டுள்ளன. விரல் கணக்கு என்ற முறையில் கடல் வழி தூரம் அளக்கப்பட்டதை துல்லியமாக விவரித்துள்ளார். கடலில் வழி காணும் முறையில் விண்மீன்கள் பெயர்களும் குறிக்கப்பட்டுள்ளன. ஒரு கயிற்றின் உதவியால் ஒரு முனையைப் பல்லில் கடித்துக் கொண்டு அதன் மற்றொரு முனை ஒரு தகட்டில் சொருகப்பட்டு, (ராப்பலகை) இன்றை செக்ஸ்டண்ட் போல பயன்படுத்தப்பட்டிருப்பது அனேகருக்குத் தெரியாத விஷயம். அதை படத்துடன் விளக்கியுள்ளார்.
இவற்றைத் தவிர அக்காலத்துச் சோழர்களின் கடல் வழி விவேகத்தைப் பல உதாரணங்களுடன் சுட்டிக் காட்டியுள்ளார். பல்லவர் காலத்து கடல் வழி வணிகத்தைப் பற்றி ஏழாம் நூற்றாண்டு சரித்திரத்தை நன்கு ஆராய்ந்துள்ளார். தாய்லாந்தில் படியெடுக்கப்பட்ட தமிழ் பிராமி கல்வெட்டுச் சாசனத்தைப் பற்றியும் விவரித்துள்ளார். இவை பல அறிஞர்களால் நன்கு ஆராய்ச்சி செய்யப்பட்ட கருத்துக்களே. ஆயினும் இவர் எழுதியுள்ள முறை சிறப்பாகவும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பல விஞ்ஞான முறைகளைப் பரிசீலித்து, "நட்சத்திர சக்கரம்' முதலானவையோடு ஒப்பிட்டு எழுதியுள்ளது வரவேற்கத்தக்கதாகும்.
இந்த நூல் கட்டாயமாகத் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுத் தமிழ் சமுதாயத்திற்கு உதவ வேண்டும். இம்மாதிரியான முயற்சிகளை மேற்கொண்ட அருணாசலமும், பதிப்பித்த மேற்கு நேவல் கமாண்டும் போற்றப்பட வேண்டியவர்கள். இந்நூல் எல்லா கல்லூரிகளின் நூலகங்களிலும் கட்டாயமாக இருக்க வேண்டியதாகும்.