தர்மா பப்ளிகேஷன்ஸ், 42, முதல் குறுக்குத் தெரு, 2வது முதன்மைச் சாலை, தாகூர் நகர், லாசுப்பேட்டை, புதுச்சேரி- 605 008. (பக்கம்: 98)
பவுத்த நெறி உலகின் எல்லாத் தீமைகளையும், அழிப்பதற்கான விதையைத் தன்னில் கொண்டிருக்கிறது என்று கருதுகிற, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த, தாழ்த்தப்பட்ட இனத்தாரின் முன்னேற்றத்தையே தன் முன்னேற்றமாகக் கருதி வாழ்ந்து வருகிற சகாதேவன் என்ற வி.எம்.மவுரியா என்பவரின் வாழ்க்கைச் சுவடுகளைப் பதிவு செய்கிற நூலாக இது அமைந்திருக்கிறது.
"சமர்பணம்' என்று தொடங்குகிற முதல் பக்கத்திலிருந்து பக்கத்துக்குப் பக்கம் மலிந்து காணப்படுகிற அச்சுப் பிழைகள் (திருக்குறளைத் திரிக்குறள் என்று அச்சடிக்கிற அளவுக்கு) படிக்கிறவரை சலிப்படையச் செய்கின்றன.
எழுதிச் சென்றிருக்கிற பாங்கும் கோர்வையாக இல்லை. எடுத்துக்காட்டாக சகாதேவன் என்பவர் தாம் வி.எம்.மவுரியா என்பதே தெளிவாகப் பதிவு செய்யப்படவில்லை.
நூல் நெடுக மவுரியாவின் நிகழ்ச்சி குறிப்பு டைரியைப் படிக்கிற உணர்வு தான் மேலோங்கி நிற்கிறது. பவுத்தம் ஒரு அழியாத சகாப்தம் என்ற ஒரு கட்டுரையும் பெயருக்கு இடம் பெற்றுள்ளது.
"தீவிரவாதம் ஜாதி - மத இனக் கலவரங்கள் யாவும் நீங்கிட பேரன்பை போதிக்கும் புத்த தம்ம கருத்தியல் நிறையப் பெற்ற இந்நூல் உலக சமாதானத்திற்கு பெரிதும் உதவும்' என்று நூலின் தொடக்கத்தில் ஓர் ஆசிரியர் குறிப்பு இடம் பெறுகிறது. அப்படியானால் அது நல்லது தான்.