கடந்த, 1945லிருந்து உலகில் ஒருவரது புகழ் ஏறுமுகமாகவே இருந்தது என்றால், அது ஸ்டாலின். நாஜிகள் முதன்முதலில் தோல்வியைச் சந்தித்தது சோவியத் ரஷ்யாவில் தான். அவர்களை தனது மண்ணிலிருந்து விரட்டியது மட்டுமல்லாது, ஜெர்மனி வரை துரத்தி சென்று மண்ணைக் கவ்வ வைத்ததும் அந்த நாடு தான். அதன் தலைவர் என்ற முறையில், ஸ்டாலின் உலக மக்களின் பேரன்பைப் பெற்றிருந்தார்.
போரில் கிடைத்தது ஒரு வெற்றி மட்டுமல்ல; அதைத் தொடர்ந்து ஏற்பட்ட இந்தியா உள்ளிட்ட காலனி நாடுகளின் விடுதலை, மலர்ந்த சீனப் புரட்சி, பலப்பட்ட நாடாளுமன்ற ஜனநாயக முறைமை, கிடைத்த சமூக பாதுகாப்பு நலத் திட்டங்கள் என்பவையும் வெற்றியின் விரிந்த அர்த்தத்தை உலகிற்கு பறைசாற்றின. அதன் காரணமாகவும் ஸ்டாலினின் புகழ்க்கொடி
உச்சத்தில் ஏறியது.
இதனால் நொந்துபோன அமெரிக்க – ஐரோப்பிய ஏகாதிபத்தியவாதிகளும் ஏகபோகவாதிகளும் ஸ்டாலின் பெயரைக் கெடுக்கும் வேலை யில் இறங்கினார்கள். உலகையே கபளீகரம் செய்ய முனைந்த ஹிட்லருக்கு இணையாக இவரையும் வைத்து பேசுகிற அக்கிரமத்தைக் கூடச் செய்தார்கள். இதற்கெல்லாம் பதிலடி கொடுத்து வந்தார்கள் கம்யூனிஸ்டுகள்.
இந்த சூழலில்தான், 1956ல் நடந்த சோவியத் கம்யூனிஸ்டு கட்சி மாநாட்டில் ஸ்டாலின் பற்றிய ஒரு ‘ரகசிய உரை’ ஆற்றினார் அதன் முதல் செயலாளராக உயர்ந்திருந்த குருச்சேவ். விரைவிலேயே அது ‘உலகறிந்த ரகசிய உரை’யானது. இதுவரை போற்றப்பட்டு வந்த ஒரு தலைவரை திடீரென்று இப்போது குற்றங்களின் மொத்த உருவமாக சித்தரித்தார் குருச்சேவ். அவரைப் பற்றிய சரியான மதிப்பீடாக அது இல்லை.
இதைக் கேட்டு ஏகாதிபத்தியவாதிகளும் ஏகபோகவாதிகளும் ஆனந்த கூத்தாடினார்கள். கிராமங்களில் சொல்வது போல ‘சொந்தக்காசில் சூன்யம் வைத்தது போலாயிற்று’ உலக கம்யூனிஸ்டு இயக்கத்திற்கு. ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அன்று ஒன்றுபட்டிருந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி, குருச்சேவின் இந்த வசைபாடலை அன்றே ஏற்கவில்லை.
அதன் மத்தியக் குழு நிறைவேற்றிய தீர்மானம், ‘நிறைகளுக்கெல்லாம் ஒட்டுமொத்த சோவியத் கட்சி காரணம், குறைகளுக்கு மட்டும் ஒரு தலைவர் -ஸ்டாலின் -காரணம் என்பது என்ன நியாயம்’ என்று கேட்டது.
இத்தகைய குருச்சேவின் உரையை விரிவாக அலசி ஆராய்ந்திருக்கிறார் பேராசிரியர் குரோவர்பர் தனது ‘ஸ்டாலின் பற்றிய குருச்சேவின் பொய்கள்’ எனும் நூலில். ஸ்டாலின் பற்றி குருச்சேவ் கூறிய, 61 குற்றச் சாட்டுகளையும், ஒவ்வொன்றாக மறுத்திருக்கிறார்.
ஸ்டாலின் செய்ததெல்லாம் தவறுகளே என்பதாக குருச்சேவ் சொன்னார் என்றால், ஸ்டாலின் தவறே செய்யாதவர் என்பதாக நிரூபிக்க முனைகிறார் குரோவர்பர். உண்மை என்னவோ இந்த இரண்டுக்கும் இடையில் இருப்பதாகப் படுகிறது.
அது ஒரு கோடி என்றால் இதுவொரு கோடி என்றாலும் இந்தக் கோடியும் வாசகர் முன்பு வைக்கப்பட்டால் தான், அவரால் இடையில் உள்ள உண்மையைக் கண்டறிய முடியும். அந்த வகையில் இந்த நூலின் வரவு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. அதுவும் இந்திய மொழிகளிலேயே தமிழில்தான் இது முதலில் வருகிறது என்பது, நமக்கு கிடைத்துள்ள அரிய வாய்ப்பு.
நல்ல, எளிய தமிழில் பெயர்த்திருக்கிறார் செ.நடேசன். பழைய சோவியத் ரஷ்யாவிற்கான ஏக்கம் இப்போது அந்த நாட்டில் அதிகரித்து வருவதாகவும், ஸ்டாலின் பற்றி புது மரியாதை பிறந்திருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன. இங்கோ பலரின் நெஞ்சில் பழைய கம்யூனிஸ்டு-எதிர்ப்பாளர்கள் வரைந்து விட்டுச் சென்ற ‘ஸ்டாலினின் சர்வாதிகார ஆட்சி’ எனும் மோசமான சித்திரமே இன்னும் மிஞ்சியிருக்கிறது. உலகு இதுவரை கண்டிராத சமதர்ம சமுதாயத்தை சமைப்பதற்கான உன்னத முயற்சியில் நிகழ்ந்த நிறை-குறைகள் என்று ஸ்டாலின் காலத்தை கணிக்கும் பார்வை இன்னும் வரவில்லை. அதை வரவழைக்க இந்த நூல் ஒரு வகையில் பெரிதும் உதவும்.
தொடர்புக்கு: arunan.kathiresan@gmail.com
– அருணன்