தென்னிந்திய நாணயவியல் சங்கம் ஆண்டுதோறும் நடத்தி வரும் கருத்தரங்குகளில் வாசிக்கப்படும் ஆய்வுக் கட்டுரைகள் குtதஞீடிஞுண் டிண குணிதtட ஐணஞீடிச்ண இணிடிணண் என்ற பெயரில் வெளியிடப்பட்டு வருகின்றன. 2006ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஆந்திர மாநிலம் குப்பத்தில் அமைந்துள்ள திராவிடப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் 27ம் தொகுதியாக வெளியிடப்பட்டுள்ளன.அக்கருத்தரங்கில், நாணயவியல் கழகத் தலைவர் பேராசிரியர் ப.சண்முகம் நிகழ்த்திய ஆய்வுரை முதற் கட்டுரையாக அமைந்துள் ளது. தொல்லெழுத்தியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் தமது கட்டுரையில், வட இந்தியாவிலுள்ள மதுராவில் நிகழ்ந்த அகழாய்வில் கண்டறியப்பட்ட ஒரு முத்திரையில், "அய்யாதனன் என்பவனுடைய (முத்திரை) எனப் பொருள்படும் "அயதனஸ' என்ற சிங்கள பிராமி வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது என ஆய்வு செய்து விளக்குகிறார்.இத்தொகுதியில் இடம் பெற்றுள்ள புதிய கண்டுபிடிப்புகள் பல கி.பி.9ம் நூற்றாண்டைய கன்னட எழுத்துக்களில் "நுளம்ப நாராயண' எனப் பொறிக்கப்பட்ட காசுகள் பெல்லாரிப் பகுதியில் கண்டறியப் பட்டு, வெங்கடேஷ், கிரிஜாபதி ஆகியோரால் ஆராயப்பட்டு வெளிப்படுத்தப்பட்டுள்ளன. நாணயங்கள் மட்டுமின்றி, அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட பல்வேறு உலோகப் பொருட்கள் பற்றிய உலோகவியல் ஆய்வுகளும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. தியாக. சத்தியமூர்த்தி, ப.சசிசேகரன், ப.ரகுநாதராஜ் ஆகியோரால் வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை சில ஆய்வு முடிவுகளை வரிசைப்படுத்திக் கூறுகிறது. எடுத்துக்காட்டாக, சிந்து சமவெளி நாகரிக அகழ்விடங்களில் கண்டறியப்பட்ட செம்புப் பொருட்களில் செம்புக் கனிமத்துடன் பாஷாணங்கள் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவை போன்ற பழங்குறிப்புகளைச் சேகரித்து ஆராய்ந்தால் பண்டைத் தமிழர்களின் உலோகவியல் அறிவு பற்றிய புதிய செய்திகள் வெளிவரும்.ஆய்வாளர்களின் கண்டுபிடிப்புகள், வாசிப்புகள், நாணயவியல் கலைச் சொற்கள் பற்றிய பொருள் விளக்கங்கள் முதலியவற்றில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்போது அவை உரிய வகையில் சுட்டிக் காட்டப்படுவது தேவையே. அந்த விதத்தில் "வஞ்சிகோ' எனப் பிராமி எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ள சேரர் காசு பற்றிய கட்டுரையில், அடிக்குறிப்பாக பி.வி.பரப்பிரம்ம சாஸ்திரி, ஐ.மகாதேவன், தினமலர் இரா.கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் மாறுபட்ட கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.தென்னிந்திய நாணயவியல் குறித்த ஆய்வுகள், இந்திய வரலாற்றாய்வுக்கு மிகுந்த அளவில் பங்களிப்பு நிகழ்த்தக்கூடியவை ஆகும். தமிழ் செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய வரலாற்றாய்வில் தென்னிந்திய நாணயவியல், கல்வெட்டியியல், தொல்லெழுத்தியல் ஆய்வுகள் மிகவும் முதன்மையான இடம் பெறக்கூடியவை ஆகும். எனவே, இத்தகைய ஆய்வுகள் போற்றத்தக்கவை.