விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
பாரம்பரியம் மிக்க நமது நாட்டுக்கு எத்தனையோ சிறப்புகள் உண்டு. அவற்றில் முதன்மையானவை, நமது சாஸ்திரங்கள். நமது சமூக வாழ்க்கையின் எல்லாத் துறைகளையும் சார்ந்த வாழ்க்கை நெறிமுறைகளை _ தர்மத்தை அந்தந்தக் காலகட்டத்துக்கு ஏற்றவாறு மறுசீரமைக்க, அந்தந்த சாஸ்திரத்தில் கரைகண்ட விற்பன்னர்கள் அவ்வப்போது நமது நாட்டில் தோன்றியுள்ளனர். அதன் பலனாகத்தான் அந்த சாஸ்திரங்கள் இன்றும் நமது வாழ்க்கையுடன் இணைந்து செல்கின்றன.
மன்னர்கள் எவ்வாறு ஆட்சி செய்ய வேண்டும் என்பது குறித்த தனி நூல் நமது நாட்டில் ஒரு காலகட்டம் வரை இல்லை எனலாம். வேதங்களும் பிற சாஸ்திரங்களும் சொல்லும் ஆலோசனைகளை ஒட்டியே அவை தொடர்ந்து வந்தன. இந்த முறையில் அவ்வப்போது ஏற்படும் சிக்கல்களுக்கு சாஸ்திரங்களின் உதவியுடன் பரிகாரங்கள் கூறி, சரிசெய்து வந்தனர். இப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில் அரசியல் மற்றும் ஆட்சி முறை குறித்து ஒரு நூல் எழுத வேண்டும் என்று சாஸ்திரங்களில் தேர்ந்த ஒருவருக்கே தோன்றியது. தட்சசீலப் பல்கலைக்கழகம் உருவாக்கிய அந்த மாணவன்தான் கௌடில்யன் எனப்படும் சாணக்கியர். அநேகமாக இதுவே உலகின் முதல் நிர்வாக நூலாக இருக்கக் கூடும். அந்த நூல் அர்த்தசாஸ்திரம்!
வெறும் விதிகளை மட்டும் சொல்லாமல், விதிவிலக்குகளுக்கு உரித்தானவற்றையும் விவாதிக்கிறது அர்த்தசாஸ்திரம். சாம _ தான _ பேத _ தண்ட முறைகளை எவ்வாறெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை தகுந்த உபாயங்களுடன் விளக்குகிறது. தான் படைத்தவற்றை தகுந்த ஒரு அரசன் மூலமாகவே செயல்படுத்திப் பார்க்கவேண்டும் என்ற எண்ணத்தில் சாணக்கியர் உருவாக்கிய மாவீரன்தான், அன்றைய இந்திய நாடு கண்ட சந்திரகுப்த மௌரியன்.
ஜனநாயகம் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்தில்கூட நம் அரசியல் தலைவர்கள் மக்கள் நலம் தொடர்பான விஷயங்களில், சரியான விதத்தில் முடிவெடுக்க முடியாமல் திணறுகின்றனர். உள்நாட்டுப் பிரச்னைகள் மட்டுமின்றி, நமது அண்டை நாடுகளுடனான உறவு நிலை வரை, நம்மால் சரியான ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. ஆனால் சாணக்கியரின் திட்டமிடல்களும், அண்டை நாடுகளுடன் அவர் மேற்கொண்ட அணுகுமுறையும் எப்படி மாபெரும் வெற்றியைத் தந்தன என்பதை, ஓவியங்களுடன் ஜெ.பிரபாகர் எழுதியிருக்கும் இந்த நூலைப் படிப்போர் நிச்சயம் உணர்ந்து கொள்வார்கள்.