காவ்யா, 16, இரண்டாவது குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை-24. (பக்கம்: 960. விலை)
"வலிகளும் வகைகளும் எழுத்தாளர்களின் இருப்பிற்கான அடிப்படைத் தேவையாகி விடுகின்றன. இவைகள் தாம் தங்களுக்குள் வேகமான மாறுதல்களைக் கொண்டு வருவதற்கான கிரியா ஊக்கிகள் தங்களின் படைப்பூக்கத்திற்கான ஊற்றுக்கண்கள் எனவும் நம்புகின்றனர். எனவே, வெற்றிகரமான வாழ்க்கையின் அடையாளம் வலிகளையும், துக்கங்களையும் அள்ளி வழங்குபவைகளை நோக்கி, அலைந்து திரிவதுடன் என்று தம் வழிநெறியை அமைத்துக் கொள்பவர்கள் எழுத்தாளர்கள் என்று இலக்கணம் வகுக்கும் பேராசிரியர் க.பஞ்சாங்கத்தின் மணி விழா வெளியீட்டான இக்கட்டுரைத் தொகுப்பில் பல்வேறு காலக்கட்டங்களில் அவர் எழுதிய கலை, இலக்கியம், அரசியல், சமூகம் சார்ந்த 68 விமர்சனக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் அதிகப்படியாக ஒன்பது கட்டுரைகள் தலித் இலக்கியம் தொடர்புடையவை.
புதுமைப் பித்தன், பாரதிதாசன், வேதநாயகம், தமிழ் ஒளி, தமிழன்பன், சிற்பி, சின்னப் பாரதி, பிரபஞ்சன் மற்றும் சு.ரா., இ.பா., இ.ரா., (முழு பெயர்களை ஏனோ கட்டுரைகளில் குறிப்பிடவில்லை) போன்றவர்களின் படைப்புகளும் திறனாய்வு செய்யப்பட்டுள்ளன. "வலிமை தான் ஆளும் என்றால் உண்மையில் வலிமைமிக்க ""பாட்டாளிகள் தாம் இன்று நாட்டை ஆள வேண்டும். ஆனால், அப்படி நடக்கவில்லை. எனவே, "வலிமை என்ற கோட்பாடு ஆணாதிக்கச் சமூகத்தில், நவீன விஞ்ஞானத்தின் மூலமாகவும் திணிக்கப்படுகிறது என்பதை இன்றைய பெண்ணியல் வாதிகள் தோலுரித்துக் காட்டியுள்ளனர் (பக்.550), என்னுமிவரது "பெண்ணியம் கோட்பாடு அடிப்படையில் பல கட்டுரைகள் இதில் இடம் பெற்றுள்ளன. பாரதிபுத்திரன் அணிந்துரையில், ""பஞ்சு தன்னைத் தேடுகின்ற படைப்பாளி. தன்னையும் தன்னோடு இயங்கும் உலகையும் திறந்த மனதோடு தேடி மனித மனங்களின் அத்தனை அவலங்களையும் மேன்மைகளையும் படைக்கும் படைப்பாளி. தன் சொந்த வாழ்வின் அனுபவங்களின் வாயிலாகத் திரண்ட அறிவோடு படைப்புகளின் ஊடாக வாழ்வைத் தேடிப் படைப்பைத் திறனாய்வு ஆய்வாளர் என்று குறிப்பிட்டுள்ளது முற்றிலும் உண்மையே. நவீன இலக்கியக் கோட்பாடுகள் பற்றிய இந்நூல் தமிழிலக்கிய வளர்ச்சிக்குத் தூண்டுகோலாய் அமையும் புது வரவாகும்.