விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
வாசகர்கள் அறிந்த அனுபவமிக்க பத்திரிகையாளரும், எழுத்தாளருமான ரா.கி.ரங்கராஜன், தான் அறிந்த மனிதர்கள், படித்த விஷயங்கள், காதால் கேட்ட சுவையான தகவல்கள் போன்றவற்றை கட்டுரைகளாக்கி எல்லோருக்கும் விருந்து படைத்து வருகிறார். அவர் எழுதிய சுவையான கட்டுரைகளின் தொகுப்பே, இந்த நூல்.
இந்த நூலில், அவருடன் பழகியவர்கள், அவர் அறிந்த மனிதர்கள், பத்திரிகையில் அவர் பணிபுரிந்தபோது நடந்த பல சுவையான விஷயங்கள் ஆகியவற்றைப் பற்றி அவருக்கே உரிய நகைச்சுவை உணர்வுடன் வித்தியாசமாகக் கூறியுள்ளார்.
ஆங்கில நாவல்களை மொழிபெயர்த்த அவருடைய அனுபவங்கள், வாசகர்களுக்கு நல் விருந்து. கார்டூனிஸ்டுகளான ராஜு, கோபுலு, மாலி போன்றவர்களோடு தனக்குள்ள அனுபவங்களைப் பற்றியும் எழுதியுள்ளார்.
அங்கங்கே குட்டிக் கதைகளுக்கும் பஞ்சமில்லை. நிறைய குட்டிக்கதைகள் மூலம்தான் சொல்ல வரும் கருத்துக்கு வலு சேர்த்திருக்கிறார். உலகம் அவர் பார்வையில் வித்தியாசமாகத் தெரிந்ததை இவருடைய கட்டுரைகளில் இருந்து நம்மால் உணரமுடிகிறது.
தொலைக்காட்சி செய்திகள், தொடர்கள் போன்றவற்றில் கண்ட நெருட வைத்த காட்சிகள், நெகிழச்செய்த காட்சிகள் ஆகியவற்றை விமர்சனப் பார்வையோடு தந்துள்ளார். சில செய்திகளுக்குப் பின்னுள்ள சுவாரஸ்யங்களையும் கதைகளையும் கொடுத்திருப்பது, பொது அறிவுக்கு விருந்து.