விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
கிராமங்கள் இயற்கை எழில் வாய்ந்தவை. ஆறுகள், ஓடைகள், குளங்கள், குன்றுகள், குறுங்காடுகள், பச்சை வயல்கள், மரம், செடி, கொடிகள் சூழ்ந்து, ஒரு பிரதேசத்தின் பசுமையான முகவரியாகத் திகழ்கிறது.
கிராம மக்கள் சூட்சுமம் இல்லாதவர்கள். வெளிப்படையாக, எளிமையாக விளங்குபவர்கள். அப்படிப்பட்ட ஒரு கிராமத்தில், இளம் பருவத்தில் விளையாடித் திரிந்த காடுகளையும், கரடுகளையும், பறித்து ருசித்த பிஞ்சுகளையும், தானியங்களையும், விளையாட்டுகளையும், பழக்க வழக்கங்களையும், மறக்கமுடியாத நிகழ்வுகளையும் சிறுசிறு குறிப்புகளாக நினைவுகூர்கிறார் நூலாசிரியர் வீரா கோபால்.
பால்ய பருவம் ஒவ்வொருவருக்கும் பசுமையான பருவம். இன்பமோ துன்பமோ, காலம் கடந்து பார்க்கும்போது நிச்சயம் அது மறக்கமுடியாத சுகமாகத்தான் மாறிப்போகிறது. அப்படித்தான் பழைய நினைவுகளை உணர்ந்து உற்சாகமாக எழுதியுள்ளார்.
நாம் இந்த நூலைப் படிக்கும்போது, நமது இளம் பிராயத்து நினைவுகளும் காட்சிகளாக விரிந்து நம்மை அந்த வாழ்க்கைக்கே அழைத்துச் சென்று குதூகலிக்க வைக்கிறது. மீண்டும் நமது ஊரில் வாழ்ந்ததுபோலவே பரவசமடையச் செய்கிறது.
இது ஒரு வாழ்க்கை அனுபவப் பதிவு. நவீன விஞ்ஞான வளர்ச்சியால் எல்லாம் மாறிவரும் இந்தக் காலத்தில் இது போன்ற அனுபவப் பதிவு அவசியம். இன்னும் சில காலங்களில் இதுமாதிரியான வாழ்க்கை முற்றிலும் இல்லாமல் போய்விடும் நிலை வரலாம். அடுத்த தலைமுறைகள், தன் முன்னோர்களின் வாழ்க்கையையும், தங்கள் ஊர் அடைந்திருக்கும் மாற்றத்தையும் புரட்டிப் பார்க்க இந்நூல் கண்டிப்பாக உதவும். இதைப் படித்துக்கொண்டே ஒருமுறை இந்த ஊருக்குள் பயணித்து வரலாம்.