விலைரூ.450
முகப்பு » வாழ்க்கை வரலாறு » இந்திய வரலாற்றில்
புத்தகங்கள்
இந்திய வரலாற்றில் வ.உ.சி.,
விலைரூ.450
ஆசிரியர் : ப. முத்துக் குமாரசுவாமி
வெளியீடு: நோபல் பப்ளிகேஷன்ஸ்
பகுதி: வாழ்க்கை வரலாறு
Rating
சாலிக்கிராமம், சென்னை-93.
(பக்கம்: 816)
வ.உ.சி.,க்கு நூற்றாண்டு கொண்டாடிய, அவரைப் பற்றிய தொகுப்பு ஒன்றுமே வெளிவராத குறையை, இந்நூல் நிவர்த்திக்கிறது. ஆசிரியர் சொல்கிறார்: ""கடந்த ஓராண்டு காலமாய் குருவி சேகரிப்பது போல சேகரித்துத் தந்த செய்திகள், இது உண்மையே. அதுவும் வ.உ.சி.,யின் வம்சாவழிப் பேரனாகிய, முத்துக்குமாரசுவாமி தமது கடமையாகவே, இப்பெருங்காரியத்தைச் செய்துள்ளார்.
111 குறிப்புகள் உள்ள இந்நூல், ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, ஆய்வாளர்களுக்கு அரும் பொக்கிஷமாகத் தரப்பட்டுள்ளது.வ.உ.சி.,யின் திருமணப் பத்திரிகையின் உருவ வடிவத்துடன் ஆரம்பமாகும் நூலின் வளர்ச்சி, அவரது வாழ்க்கையை முற்றிலுமாகப் பிரதிபலிக்கின்றது. முதன்மைக் குறிப்புகளாக, முத்துக்குமாரசுவாமி ஆவணக் காப்பகங்களிலிருந்தும், பல பத்திரிகைகளிலிருந்தும்; தனி நபர்களிடமிருந்தும், சேகரித்துள்ள விஷயங்கள் சாமானிய விஷயமல்ல. பல ஆவணங்களின் நகல்கள் நம்மை வியக்க வைக்கின்றன.
அண்மையில் நான் பாரதியைப் பற்றி ஆய்வு மேற்கொண்டபோது, எனக்குக் கிடைத்திராத தகவல்கள், இந்நூல் மூலமாக எனக்குக் கிட்டின. அதில் ஒன்று வ.உ.சி., மாமா என்றழைத்த பாரதியைச் சந்தித்தபோது நிகழ்ந்தது. (பக்கங்கள்: 475-478)
இந்நூலில் எல்லா அத்தியாயங்களுமே முக்கியமானவை. செ.திவான் என்பவர் எழுதியுள்ள, வ.உ.சி.,யின் உயில், பல முக்கிய தகவல்களை உள்ளடக்கியுள்ளது.சுதேசிக் கப்பல் கம்பெனியைப் பற்றித் தந்துள்ள விவரங்கள், மிகவும் முக்கியமானவை. 18, 19 அத்தியாயங்கள் துல்லியமாக இந்நிறுவனத்தைப் பற்றிச் சாதாரணமாகத் தெரியும் விஷயங்களைத் தவிர, புதிய பல செய்திகளைக் கொடுக்கின்றன.
தொகுப்பாளர்களில் சிறந்தவர் சீனி விசுவநாதன். அவரது கட்டுரை (பக்கம்: 116 - 190) இந்திய நாளிதழில் அவ்வப்போது வெளியிடப்பட்ட வ.உ.சி.,யைப் பற்றிய (1906-1910) குறிப்புகளைக் கொடுக்கிறது.
மற்றொரு அரிய தலைப்புள்ள, இரு கட்டுரைகள் பாரதி - வ.உ.சி., விவாதம் பற்றியவை (பக்கம்: 366-396) தமிழில் எழுத்துக் குறையைப் பற்றியது. அவரது தமிழ்ப் புலமையை இதில்காணலாம்.
வ.உ.சி., சிறந்த சைவர். அவரது சைவ வெளியீடுகளைப் பற்றி சிறப்பான கட்டுரைகள் இரண்டு, (அ.சங்கரவள்ளிநாயகம், டாக்டர் அரங்க ராமலிங்கம்) இந்நூலில் இடம் பெறுகின்றன. மிகத் தரமான இக்கட்டுரைகள் படிக்க வேண்டியவை.
கப்பலோட்டிய தமிழன் என்று மட்டுமே அறியப்பட்ட, சிதம்பரனாரின் பன்முகப் பார்வை இந்நூலில் வெளிக் கொணரப்பட்டுள்ளது.மொத்தத்தில் இந்நூல், ஆய்வாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். பள்ளி நூலகங்களில் கட்டாயமாக வைக்கப்பட வேண்டிய நூல்.தமிழர்கள் பெருமிதத்துடன் படிக்க வேண்டிய நூல்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!