மத்வரின் சம்பிரதாயத்தைப் பின்பற்றுவோர் மாத்வர்கள். தமிழகத்தில் வசிக்கும், கன்னட மற்றும் வடமொழியில் எழுத, படிக்க தெரியாத மாத்வர்களுக்கு, மத்வரின் துவைத சித்தாந்தத்தை அறிமுகம் செய்வதற்காக எழுதப்பட்ட எளிய நூல் இது.
‘அத்வைதம்’ என்றால், ‘இரண்டல்ல’ என்று பொருள். அதாவது, ஜீவனும், பிரம்மமும் ஒன்று தான் (பக். 36).
உலகில் பல உயிர்கள் உள்ளன. அவை அனைத்தையும் தனக்கு உடலாகக் கொண்டு, வியாபித்திருப்பது இறைவன் (பக். 39) என்பது, விசிஷ்டாத்வைதம். இறைவன், உயிர், ஜடம் என்ற மூன்றும், அநாதி காலமாகவே இருந்து வருபவை. அவற்றுள் வேறுபாடு உண்டு. முரண்பாடுகள் உண்டு. அதை மாற்ற முடியாது. அவை என்றும் இருக்கும். இந்த வேறுபாடு ஐந்து வகையானது என்பது துவைதம் (பக். 43–44).
மத்வர் ஏற்படுத்திய மடங்கள், அவர் இயற்றிய நூல்கள், அவருக்கு பின்னால் வந்த மத்வ மகான்களின் வாழ்க்கை. அவர்கள் எழுதிய நூல்கள், மத்வ சம்பிரதாயத்தைச் சேர்ந்த புனித தலங்கள் என, துவைத சித்தாந்தத்தின் சிறப்பையும், வரலாற்றையும் எளிய மக்களுக்கு அறிமுகம் செய்யும் நல்ல நூல்.
திருநின்றவூர் ரவிகுமார்