ராமபிரானின் பண்பையும், ஒழுக்கத்தையும் விளக்கும் நூலாக உள்ளது. கம்பன் பாடல்களில் சில மிகநுட்பமாக ஆய்வு செய்து எழுதியுள்ளார். ‘திருஉறப்பயந்தனள், உரம் உருவிய வாளி, ஏழிரண்டாண்டில் வா, முறைமை அன்று, என்னது கடன்’ என்ற ஆறு தலைப்புகளில் நூலாசிரியர், கம்பன் பாடல்களில் சிலவற்றை விவரித்துள்ளார்.
விஸ்வாமித்ரரிடம் இருக்கும்போது தான் தாடகை வதைப் படலம் முதல் அடுத்து வரும் படலங்களில், ராமபிரான் ஆற்றல் வெளிப்படுகிறது (பக்.25); கைகேயின் வரத்தை நிறைவேற்றியதன் மூலம் வாக்குத் தவறாதவன் என்ற பெயரைப் பெற்ற தசரதன், ராமனை வனவாசம் செல்லக் கட்டளையிட்டது நீதிதவறிய செயல் (பக். 57); உலக நாடுகளில் பல்வேறு அரசமைப்புகள் இருப்பதைக் கூறி, ராமனும் அயோத்தியை விடுத்து பிற தேசங்களை வென்று, புதிய அரசு உருவாக்கியிருக்கலாம் என்ற சுவையான கற்பனை (பக். 66); ஆகியவை, நயம்பட உரைக்கப்பட்டுள்ளன. நூலின் இறுதியில், நூலாசிரியர் இளையோர்களுக்குக் கூறும் அறிவுரையை, இன்றைய இளைஞர்கள் தவறாது படித்தல் அவசியமாகும்(பக். 86).
-டாக்டர் கலியன் சம்பத்து