கடந்த, 1947ல் நடந்த இந்தியா – பாக்., போர் பின்னணியை முழுமையாக விளக்குகிறது இந்த நூல். ஆசிரியர் ராணுவத்தில் பணியாற்றியவர் என்பதால், ராணுவ செயல்பாடுகளையும், நுணுக்கங்களையும் எளிமையாக விவரிக்கிறார். போரின் நிகழ்வுகள், அதில் இந்திய ராணுவ வீரர்களின் தியாகம், அரசியல்வாதிகளின் தவறான அணுகுமுறை என, அனைத்தும் விளக்கப்பட்டுள்ளன.
காஷ்மீரில் உரிமை கோரும் பாகிஸ்தானின் நடவடிக்கையை ஏற்க மறுப்பதற்கான காரணத்தை ஆதாரங்களுடன் பேசுவது கடினம். அதனை எளிமைப்படுத்தி இருக்கிறார், நூலாசிரியர். காஷ்மீர் பிரச்னை ஏன் ஐ.நா.,வுக்குச் சென்றது; சட்டப் பிரிவு – 370 சொல்வது என்ன; ஆண்டுகள் பல உருண்டோடி விட்டாலும் காஷ்மீர் பிரச்னை தீர்க்கப்படாமல் இருப்பதன் பின்னணி என்ன ஆகியவை விளக்கப்படுகின்றன.
கடந்த, 1947 முதல், காஷ்மீரில் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு, அங்கு பயங்கரவாதம் வளர்ந்த வரலாறு, 1989ல் பயங்கரவாதிகள் அட்டகாசம் அதிகரித்தது என, பல சம்பவங்கள், அனைத்தையும் அசைபோட வைக்கின்றன. விறுவிறுப்பான மொழிநடை.
– ஜனா