வாழ்க்கை நமக்குத் தரும் அனுபவங்கள் எல்லாமே பாடங்கள் தான். நம் வாழ்நாள் முழுவதும் அந்தப் பாடத்தைக் கற்றுக் கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். வேலை நிமித்தம் ஓர் இடத்திலிருந்து புலம்பெயர்ந்து, அந்தச் சூழலுக்கு ஏற்ப நம்மைப் பொருத்திக் கொள்வதில், எல்லோரும் வெற்றி பெற்று விடுவதில்லை. அப்படிச் சொந்த மண்ணை விட்டு வெளியேறி, பல்வேறு நிலப்பகுதிகளில், பல தரப்பட்ட மனிதர்களைச் சந்தித்து, தான் அடைந்த அனுபவங்களையும், கண்டடைந்த வாழ்க்கைத் தரிசனங்களையும், நூலாகத் தந்திருக்கிறார் ஷாஜகான்.
இந்த நூல், சுயசரிதை வடிவத்தில் எழுதப்பட்ட அனுபவத் தொகுப்பு. நூலாசிரியரே சொல்வது போல, ஒரு சாமானியனின் நினைவலைகள் தான் இவை. நினைவுகள் சுகமானவை என்பர். அந்த நினைவுகள், வாசிப்போரின் வாழ்வில் ஒரு உதவு கருவியாகப் பயன்பட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்? அதைத்தான் இந்தப் புத்தகம் செய்கிறது. சொந்த மண்ணை மறக்காமலும், வந்த மண்ணை வணங்கியும் ஒன்றுக்கொன்று அந்நியப்பட்டுவிடாமல் நிற்கின்றன இந்தக் குறுங்கட்டுரைகள். ஒரு நதிபோல வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்த அனுபவங்களின் தொகுப்பு இந்த நூல்.
அகன்