சாரு நிவேதிதா எழுதிய 15 கட்டுரைகள், ஐந்து ஆண்டுகளுக்கு முந்தியவை. சாரு பெரும்பாலும் அவர் எழுதுகிற நூல்களுக்காக எழுதியதைக் காட்டிலும் இரண்டு மடங்கு பேசவேண்டி இருக்கும் அல்லது அமைதி காக்க வேண்டி இருக்கும். ஆனால், இது கொஞ்சம் அதிர்ஷ்டம் செய்த புத்தகம்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்டிருந்தாலும், எல்லாக் கட்டுரைகளும் சூடு குறையாமல் இருக்கின்றன. அவ்வப்போது மின்தடை இருந்தாலும் மொத்த தமிழகமும் ஒரு மைக்ரோ ஓவனுக்குள்ளாக இருந்த தோற்றம். பழகிய புழுக்கமான அதே சூழலில் இன்றளவும் கட்டுரைகள் அர்த்தப்படுகின்றன.
காதலர் தினம், அன்னையர் தினங்களைக் கொண்டாடிக் கொண்டு உள்ளீட்டில் சத்தில்லாத வாழ்க்கை வாழ்வதை கடிந்து கொள்கிறார் சாரு. இதிலும் லோக்கலில் ‘பஸ் டே’ என்கிற பேரில் கொட்டம் அடிக்கும் மாணவர்களை எடுத்துக்காட்டி, மொத்தக் கல்வி அமைப்பையே கேள்விக்கு உள்ளாக்குகிறார்.
பிளந்து கட்டுவது என முடிவு செய்து விட்டால், கோடரியின் முனையை பிளேடு போலக் கூர்மையாக்கிக் கொள்வார் அவர். அரசியல் ரீதியிலான கணைகள் தவிர்த்து, தமிழகம் அதிகம் அறிந்திராத காஞ்சியிலே பிறந்த பன்மொழித் திறனாளர் அண்ணங்கராச்சாரியார், நடிகரும் பாடகருமான கொத்தமங்கலம் சீனு ஆகியோரைப் பற்றிய செம்மையான அறிமுகத்தை நிகழ்த்துகிறார். இன்றைய வாழ்க்கை முறையோடு ஒப்பிட்டு, பழைய கால வாழ்க்கை முறை மற்றும் நாட்டு மருத்துவம் பற்றியெல்லாம் விரிவாக எழுதுகிறார். அவரது இலக்கிய ரசிகர்களுக்கு அது ஆச்சரியமாகவே இருக்கும். ஜீன்ஸ் போட்டவன் ஓணான் அடித்து விளையாடியிருக்க மாட்டான் என்பது மாதிரியான நம்பிக்கை அது.
‘உருப்படியான திட்டங்கள் தேவை’ என்கிற கட்டுரையில் (2011ல், ஜெயலலிதாவின் தேர்தல் அறிக்கைக்குப் பின் மாநிலம் உய்வதற்கு மின் திட்டம் முதல் லோக் ஆயுக்தா வரை) நல்ல யோசனைகளைத் தெரிவித்துள்ளார்.
காலில் விழுந்து கும்பிடுவதைக் கட்டுப்படுத்தினாலே ஜெயலலிதாவின் இமேஜ் உயர்ந்துவிடும் என்கிற கருத்து அதில் முக்கியமானது. முனைவர் பட்டங்களுக்கான ஆய்வுகள் எந்த அழகில் ஆயத்தமாகின்றன என்பதைப் படித்தால் திக்கென்று இருக்கிறது.
திக்கொன்றும் தெரியவில்லை. ஒவ்வொரு கட்டுரையின் முடிவிலும் வருகிற பின்குறிப்புகள் சடாரெனப் புன்னகைக்கச் செய்து சிரித்த முகத்துடன் அடுத்த கட்டுரைக்கு நம்மை அனுப்புகின்றன. ஒரு பின்குறிப்பில் கருணாநிதியின் பெயரே வராமல் ஒரு துக்ளக் தயாரித்து அவரை அதிர்ச்சியில் ஆழ்த்துங்கள் எனக் கேட்டுக் கொள்கிறார். முதலில் அது ‘சோ’வுக்குத் தான் அதிர்ச்சி.
அப்புறம் தான் கருணாநிதிக்கு. இந்தக் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கிற நாட்களில், திடீரென அரசியல் மேதாவியாக மாறினார் சாரு. காட்சி வழி, காகித வழி ஊடகங்கள் பலதும் கலைஞரின் பெயரையும் சிலர் ஜெயலலிதாவின் பெயரையும் சொல்லிக் கொண்டிருந்தனர். ‘எப்படியும் எழுதுங்கள் பேசுங்கள். தி.மு.க., 30 இடங்கள் கூட வராது’ எனச் சரியாகக் கூறி அசத்தினார்.
கடந்த, 2011ல் பணம் வினியோகிக்க, பணம் பயணப்பட்ட வகைமைகள் இவ்வாறு: குப்பை லாரி, ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி, காவல்துறை வாகனம், காய்கறி மூட்டை, பஸ், லாரி, அரிசி மூட்டை, செய்தித்தாள், ஸ்டிக்கர் பொட்டு அட்டை, பேனா ரீபிள்… எனப் பேசத் தொடங்கும் கட்டுரைக்குத் தலைப்பு, ‘இது அல்லவோ சுதந்திரம்!’ இப்போது தமிழகம் முறையற்றதில் கைப்பற்றியது என, 100 கோடியைக் கடந்து தேநீர்க் கோப்பைக்குள் ரூபாய் நோட்டை வினியோகித்துக் கொண்டிருக்கிறது.
மக்கள் புரட்சி, ழாழி பிழதழ் (Sorry brother) கழகத்தின் ஆட்சி, வீழ்ச்சி ஆகியவற்றையும் கனிமொழி கருணாநிதியின் ஸ்பெக்ட்ரம் பிரச்னையையும் செய்திருக்கிற நிறப்பிரிகை அலாதியானது. ‘ழாழி பிழதழ்’ கட்டுரையில் மனுஷ்யபுத்திரனின் கனிமொழி பற்றிய கூற்று இப்படி முடிகிறது.
‘… தன்னை முன்னிறுத்துவதற்காக கலைஞர் ‘டிவி’க்கும் தமிழ் மையத்துக்கும் அந்த ஊழல் பணத்தைக் கொண்டு வந்தார். இந்தப் புதையலைக் கையாள்வதற்கான எந்தத் திறமையும் அவருக்கு இல்லை. ஊழல் பணத்தை இவ்வளவு வெளிப்படையாக, வங்கிக் காசோலையாகப் பெற்றுக் கொண்ட ஒரே நபர் இந்தியாவில் கனிமொழியாகத் தான் இருக்கவேண்டும்’.
சாரு யூகித்ததற்கு அப்பால் எதாவது மாற்றம் தமிழகத்தில் நடந்திருக்கிறது என்றால், அது மனுஷ்யபுத்திரன் தி.மு.க.,வுக்கு தலைமைக் கழகப் பேச்சாளர்களில் ஒருவராகப் போனதுதான். புதையலைக் கையாள கவிதை மூளைகளும் உதவலாம் அல்லவா?
வழக்கமாக சிரிப்பும் அங்கதமும் இன்னும் கூடுதலாக சாரு நிவேதிதாவிடம் இருக்கும். துக்ளக்கில் ‘சோ’ அதைச் செய்துவிடுவதால், காட்டத்தையும் அறிவு நுண்மையையும் மட்டும் வெளிப்படுத்தியிருக்கிறார் போலும்.
தொடர்புக்கு: sivakannivadi@gmail.com
– க.சீ.சிவகுமார்