ஆயுத எழுத்து, நம் முகத்தில் அறையும் எழுத்து! ஒவ்வொரு அஸ்தமனத்திற்கு பின்னும் ஒரு விடியல் உண்டு என்று சொன்னால், ‘எங்கள் வானம் விடியலே இல்லாத இருண்ட வானம்’ என்று சொல்வார்கள் இலங்கைத் தமிழ்ப் போராளிகள்.
அவர்களின் கண்ணீர்க் கதை தான் இந்த நாவல். கடந்த, 30 ஆண்டுகளாக இலங்கைத் தீவில், சுதந்திரத் தமிழ் ஈழத்திற்கான ஆயுத விடுதலைப் போராட்டம் நடந்து முடிந்திருக்கும் நிலையில், அந்தப் போராட்டத்தில் தான் பார்த்த, கேட்ட, அறிந்த, நேரடியாகத் தொடர்பு கொண்ட முக்கியமான பல விஷயங்களை, 1983ல் துவங்கி இந்த நாவலுக்குள் அடக்கியிருக்கிறார்
நூலாசிரியர். டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப்., உள்ளிட்ட அமைப்புகள் பற்றியும் பேசுகிறார். கடந்த, 1987ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தின் ஆரம்பத்தில், இந்தியப் படைகள் ஈழ மண்ணில் இருந்து வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை புலிகள் பகிரங்கமாக வெளியிட்டதையும், நூலாசிரியர் பதிவு செய்கிறார்.
இந்திய பஞ்சாபில், தனி நாடு கேட்டு போராடிய காலிஸ்தான் போராளிகள், பொற்கோவிலை தங்கள் மறைவிடமாகவும், தளமாகவும் பாவித்ததைப் போல, பிரபாகரனும் சுதுமலை அம்மன் கோவிலை தளமாகப் பாவிக்கிறார் என்ற சந்தேகம், இந்திய உளவுத் துறைக்கு ஏற்பட்டதை, இந்த நாவல் சொல்கிறது (பக்.162). இந்திய ராணுவத்தினரால் நடத்தப்பட்ட மோசமான படுகொலைகளையும் பட்டியலிடுகிறது. (பக்.168) தென் கிழக்கு ஆசியாவிலேயே பெரிய நூலகம் என்று அறியப்பட்ட யாழ் நூலகம் தீக்கிரையானதும்
பதிவாகிறது. ‘அன்று இரவுக்குள் அனைத்து முஸ்லிம்களும் யாழை விட்டு வெளியேறி வவுனியா நகரை தாண்டி விட வேண்டும் என்று தலைமை கட்டளை இட்டிருந்ததால், அத்தனை ஆயிரம் பேரின் உடைமைகளையம் அன்று இரவுக்குள் பரிசோதனை செய்து முடித்து அவர்களை அனுப்பிவிட முடியாது என நினைத்த புலிகள், திடீரெனப் புதிதாக இன்னோர் அறிவிக்கையை வெளியிட்டனர்.
‘அதாவது ஒரு மாற்றுத் துணியை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு மற்றவற்றை அப்படியே வீதியோரத்தில் போட்டு வாருங்கள் என்பதே! தங்கள் மண்ணை இழந்து, வீட்டை இழந்து, உடைமைகளை இழந்து, இப்போது உடைகளையும் இழந்து, உடலில் உயிரை மட்டுமே தக்க வைக்க வேண்டிய நிலை’ (பக்.258) இருந்தது.
இப்படிப் பல போர்க்கால நடவடிக்கைகளைப் பதிவு செய்து நம் கண்களில் ரத்தக் கண்ணீரை வரவழைத்து உலுக்கு எடுக்கிறது இந்த நாவல்.
எஸ்.குரு