விமானத்தை, தொடர் வண்டியை தவறவிட்டுவிடுவோமா, குறித்த நேரத்தில் பணி முடித்து வீடு திரும்ப முடியுமா, பத்திரமாக சென்றடைய வேண்டுமா என்ற கவலைகள், பதற்றம், அச்சம் போன்ற உணர்வுகள் நம்மைக் கவ்வினாலும் காரில் ஏறியதும், துாங்கி ஓய்வெடுப்பதும், காட்சிகளைக் கண்டு ரசித்துக் கொண்டு செல்வதும் வாடிக்கையான ஒன்று.
சிந்தனைகள் எல்லாம் நம்மைப் பற்றியும், நம் சார்ந்தோரைப் பற்றியும் அமையுமேயொழிய, கார் ஓட்டுனரைப் பற்றியோ, அவருக்கென ஒரு குடும்பம், அவருடைய வாழ்க்கையிலும் சுக துக்க நிகழ்வுகள், அவருடைய உள்ளத்திலும், மென்மையான உணர்வுகள் இருப்பதை அவ்வளவாகக் கண்டுகொள்வதில்லை.
தன் வீட்டில் இறப்பு நிகழ்ந்துவிட்டபோதிலும் ஒப்புக் கொண்ட பயணத்திற்கு தவறாது வந்த மஞ்சித்சிங், சோட்டானிக்கரை பகவதி அம்மன் மூலம் தாயன்பை உணர வைத்த பஷீர், மானத்திற்காக தற்கொலை செய்து கொண்ட ஆதிமூலம். சமூக அவலத்திலிருந்து தன் மனைவியை மீட்க முடியாத ஒரு டிரைவர், கல்வியில் முதன்மை பெற்ற தன் மகள் பள்ளியில் பரிசு பெறும் நிகழ்வைக் காண இயலாத கதிரேசன் என, நெடுஞ்சாலைகளில் சீறி பாயும் கார்களை ஓட்டும் டிரைவர்களின் பிரத்தியேகமான உலகத்தை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகின்றன இந்தக் கதைகள்.
வேகம், நம்பிக்கை, அவநம்பிக்கை, அன்பு, துயரம் அனைத்தும் இங்கே சீறிப் பாய்கின்றன.
– புலவர் சு.மதியழகன்