ஒருவர் ஒரு நாளில் நடந்து செல்லும் தொலைவுக்கு ஒன்று என, அறநிலைகளை சமணர்கள் அமைத்தனர் என்பது வரலாறு. உண்மையில் அவை இருந்தனவா, இன்று எப்படி உள்ளன என, அறியும் பொருட்டு, ஜெயமோகன் நண்பர்களுடன் காரில், தமிழகத்தின் ஈரோடு முதல், ராஜஸ்தானின் லொதுர்வா வரை ஆறு மாநிலங்கள் வழியாக பயணம் செய்து திரட்டிய தகவல்களை புத்தகமாக தந்துள்ளார்.
மறக்கப்பட்ட சமணத்தலங்களில், அந்த அறநிலைகளின் சங்கிலி இன்றும் அப்படியே இருப்பதை, தன் புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். சமணர்களின் அளப்பரிய பங்கை, வரலாற்று பின்புலத்துடன் விளக்கமாக எடுத்து கூறியுள்ளார் ஆசிரியர்.
ரிஷபதேவர் நாட்டை மைந்தர்களுக்கு பங்கிட்டுக் கொடுத்துவிட்டு காடு சென்று தவம் செய்து தீர்த்தங்கரராக ஆனார். பாகுபலியின் அண்ணன் பெயர் பரதன். பாகுபலி இளமையிலேயே அழகும், அறிவும் கொண்டவராக இருந்தார். மக்கள் அவரை விரும்பினர்.
ஆகவே, அண்ணனுக்கு அவர் மேல் பொறாமை ஏற்பட்டது. அவர்கள் இருவருக்கும் நாட்டை பங்கு போட்டு கொடுத்தார் தந்தை. ஆனால், அண்ணன், தம்பியின் பங்கையும் அபகரிக்க நினைத்து படை திரட்டினார். போரில் மலர் இறப்பதை தடுப்பதற்காக, பாகுபலியும், பரதனும் மல்யுத்தத்தில், ஈடுபடுவதாக ஏற்பாடு செய்யப்பட்டது. திருஷ்டியுத்தம், ஜலயுத்தம், மல்யுத்தம் ஆகிய போர்களில் ஈடுபட்டனர் என, (ப. 17) பாகுபலி பற்றிய விளக்கம் இடம்
பெற்றுள்ளது.
கர்நாடக மாநிலம், சிரவண பெலகொலா, மஹாராஷ்டிர மாநிலம் அஜந்தா குகை ஓவியங்கள் என, நேரில் பார்த்து பதிவு செய்துள்ளதுடன், அதன் சமூக பின்னணி குறித்தும் விரிவாக ஆசிரியர் எழுதிஉள்ளார்.
குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் உள்ள, சிந்து சமவெளி கால நகரமான, டோலாவீரா பற்றிய பதிவுகள் மிக சிறப்பானவை.
‘சிந்து சமவெளி நாகரிகம் பற்றி சொல்லப்பட்டு வந்த பெரும்பாலான ஐரோப்பிய ஊகங்களுக்கு, டோலாவீரா முடிவு கட்டியது. இந்நகரத்துடன் தொடர்புடைய சமகால நகரங்கள், ஹரியானாவிலும், குஜராத்திலும், கண்டு பிடிக்கப்பட்டன.
‘ஆகவே சிந்து சமவெளி நாகரிகம் என்று ஒன்று உண்மையில் இல்லை என நிறுவப்பட்டது. சிந்து சமவெளி நாகரிகம் என்று சொல்லப்பட்டு வந்தது, கிட்டத்தட்ட வட இந்தியா முழுக்க பரவியிருந்த ஒரு பெரும் பண்பாடு தான்’ (ப. 163) என விரிவாக கூறுகிறார்.
மொத்தத்தில், இந்தியாவில் சமணம் எந்த அளவிற்கு, ஒரு காலத்தில் வேரூன்றி பரவி இருந்தது என்பதை உணர வைக்கிறது இந்த புத்தகம்.