ஒரு நாவலை எடுத்தவுடன், அதை ஒரே மூச்சில் படித்து விட வேண்டும் என்ற மனநிலை வர வேண்டும். அவ்வகையில் சுதாகர் கஸ்தூரி எழுதிய, ‘டர்மரின் 384’ என்ற குறுநாவல், 24 தலைப்புகளில் விரிந்து செல்கிறது.
அறிவியல் ஆய்வுலகில் நடக்கும் போட்டிகள், புகழ், பெருமை, பணத்திற்காக விலை போக கூடிய அறிவாற்றல் இது மட்டுமல்லாமல், நாட்டின் மரபு தந்த மருத்துவ அறிவை தனக்கென உரிமை கொண்டாட திட்டமிடும் குழுக்கள் இவற்றை கதைக் களமாக கொண்டு எழுதப்பட்ட அறிவியல் மர்மம் சார்ந்த புதினம் டர்மரின் 384.
வெளிநாட்டுக்கு விற்கப்பட்ட மருத்துவ மூலக்கூறு ஒன்றை தேடி செல்லும் இரு காதலரின் முயற்சியோடு கதை செல்கிறது.
விஞ்ஞானம் வளர்ந்துள்ள இந்நாளில், எங்கும், எதிலும் கணினியுகம் என்று பேசும் அளவிற்கு நாவலிலும், கணினி வாயிலாகவும், லேப்டாப் வாயிலாகவும் மற்றும் கைபேசி சங்கேத மொழிகள், பல எண்களை கூட்டினால், 384 எண் வரும் என்ற குறியீட்டு மொழி முதலியன, படிப்பவர்களுக்கு பரவசத்தையும், ஒரு த்ரிலிங்கான அனுபவத்தையும் தருகிறது.
அடிப்படை அறிவியல் ஆய்வு, மூலக்கூறுகளை சேர்த்து, புதிய மூலக்கூறுகளை உருவாக்குவது, அவற்றின் நச்சு தன்மை, மருந்து தன்மை ஆய்வுகள், செல்களின் ஆய்வு, மிருகங்களில் பரிசோதனை, மனிதர்களில் பரிசோதனை என்று பல ஆய்வு பிரிவுகளை தன்னகத்தே கொண்டது.
‘பயோகிராம்’ (பக். 10) ஆய்வகங்களில் இது சகஜம், தன் டேட்டா தன் கருவி என்று படு ரகசியமாக விஞ்ஞானிகள் வைத்திருப்பர்.
மஞ்சள் பற்றி, 1997ல், சி.எஸ்.ஐ.ஆர்., பாதுகாப்பு உரிமை வாங்கியாச்சு (பக். 39). கணினியில் உள்ள ரகசியங்கள் அழிக்கப்பட்டிருந்தன.
எந்த இடத்துல வைச்சதெல்லாம் அழிச்சாங்களோ, அதெல்லாம் நம்ம டர்மரின் மூலக்கூறு மாதிரிகள் போட்டிக்காகவும், பணத்திற்காகவும், கணினி மூலம் மூலக்கூறு அழித்தல், ஹார்ட் டிஸ்கை வெளியே எடுத்தல், போலீஸ் கேஸ், வழக்கு, இறுதியில், குற்றம் செய்தவன் கொலை செய்யப்பட்டான் என்ற செய்தியுடன், புதினம் முடிகிறது.
‘அறம் வெல்லும்; பாவம் தோற்கும்’ என்ற அடிப்படையில் அமைந்த இந்த புதினம், வாசகர்களால் பெரிதும் வரவேற்கப்படும்.
– முனைவர் ரா.நாராயணன்