ஈழ இலக்கிய முன்னோடிகள் அறுவரின் படைப்புகளைத் தன் விசால விமர்சனப் பார்வையால் படம் பிடித்துக் காட்டியுள்ளார் எழுத்தாளர் ஜெயமோகன்.
மு.தளைய சிங்கத்தின் தத்துவமும், மெய்யியலும் பற்றி விவரித்து, தளைய சிங்கத்தின் சிறுகதைகளை (கோட்டை, தொழுகை, தேடல்...) தமிழின் மிகச் சிறந்த, 50 கதைகளின் பட்டியலில் சேர்க்கலாம்.
ஈழத்தின் படைப்பிலக்கியவாதி பட்டியலில் முதலிடம் தரத்தக்கவர் (பக்.31) என்று மதிப்பீடு செய்தும், ‘தரவுகளை முறைப்படுத்தி அவற்றிலிருந்து பொதுமைப்பாடுகளைப் பெற்று, கருத்துக்களை உருவாக்குவதில் கைலாசபதியை விடவும், அறிவியல் பூர்வமான அணுகுமுறை, சிவத்தம்பியிடம் காணப்படுகிறது (பக்.57) என்று, சிவத்தம்பி குறித்தும், ‘மார்க்சியத்தை விட்டு விலகி தனி மனித வாதம் வழியாக நவீனத்துவத்தின் படிகளில் கால் வைத்தவர் (பக்.80) என்று, பொன்னுத்துரையை மதிப்பிட்டும் குறிப்பிட்டுள்ளார்.
பயணிக்கும் கதை சொல்லி, அ.முத்துலிங்கத்தின் உலகம் மாறிக் கொண்டே இருக்கும் ஒரு நாடக வெளி (பக்.120).
‘பாரதிக்குப் பின் எழுதிய நவீனத் தமிழ்க் கவிஞர்களில், சு.வில்வரத்தினத்திற்கு இணையாக எவரும் இல்லை’ (பக்.140) என்றே துணிந்து சொல்லி, ‘நீங்கள் ஒடுக்கப்பட்டவர்களானால் அது கண்ணீரின் குருதி; நீங்கள் ஒடுக்குபவர்களானால் அது குருதியின் கண்ணீர்’ (பக்.172) என்னும் சேரனின் கவிதைகள் மூலம் அசலான புரட்சிக் கவிஞனையும் ஆய்வு செய்துள்ளார், ஜெயமோகன்.
ஈழ இலக்கியப் பார்வையை வெளிப்படுத்தும் இந்நுாலில் நுாலாசிரியரின் மாறுபட்ட விமர்சன யுக்தியும், இலக்கிய மேதைமையும் புலப்படுத்துகிறது. நல்ல படைப்பாளிகளை அடையாளம் காட்டும் ஆழமான விமர்சனப் படைப்பிது.
– பின்னலுாரான்