சமயங்களும், அதன் சித்தாந்தங்களும் மனிதனுக்கு வழிகாட்ட வந்தன. ஆனால், காலத்தின் மாற்றங்களை ஏற்று சீர்திருத்தங்களை செய்ய அவை மறுத்தன. அதனால், புதுப்புது சமயங்கள் உருவாகின.
ஆதிசங்கரர், ராமானுஜர், ஆனந்த தீர்த்தர், பசவண்ணர் போன்ற சமய சீர்திருத்த ஞானிகள் அடுத்தடுத்து நம் நாட்டில் வந்தனர். பசவண்ணர் கர்நாடகத்தில், 800 ஆண்டுகளுக்கு முன் தோன்றி, பல புதுமைகளைப் புகுத்தினார். இவரோடு இஸ்லாமிய சமய நெறிகளை ஒப்பிடுகிறது இந்த நுால்.
சமணராகப் பிறந்த பசவண்ணர், சமண சமயத்தில் இருந்த ஏற்றத்தாழ்வுகள், ஜாதிக் கொடுமைகள், பெண்ணடித்தனம், ஆரிய ஆதிக்கம் ஆகியவற்றை எதிர்த்து, வீர சைவ லிங்காயத்தார் மரபை உருவாக்கினார். பசவண்ணரின் சமூகப் புரட்சிக்கு, இஸ்லாமிய கொள்கைகள் பின்புலமாக இருந்ததாக இந்நுால் ஆய்வாளர் கூறுகிறார்.
மணப்பெண்ணின் ஒப்புதல் பெற்றே திருமணம் நிகழ்த்த வேண்டும் என்ற இஸ்லாமிய நெறியை, பசவண்ணர் ஏற்றுக் கொண்டு வழி நடத்தினார்.
முஸ்லிம் துறவிகளான சூபிகளின் சீடர்களாக, ‘காதிர்லிங்கா’ என்ற வீரசைவர்கள் இருந்துள்ளனர். சூபிகளின், ‘கான்காஹ்’ மடங்களும், வீர சைவர்களின் மடங்களும் மெய்ஞானம், உணவு, கல்வி, தீட்சை ஆகியவற்றை வழங்கி வந்துள்ளன. அராபிய அறிஞர், ‘அல்லாமா’ எனும் பட்டத்தை, ‘அல்லமபிரபு’ என்று வீர சைவ குருபீடத்திற்கும் அமைத்தனர் என்று கூறுகிறார்.
மனிதனுக்கு ஒரு முறை தான் பிறப்பு. மறுபிறப்பு இல்லை என்ற இஸ்லாமியத்தை, பசவண்ணர் அப்படியே ஏற்றார். ‘அனுபவ மண்டபத்தில்’ பல சமயக் கருத்துகளை பசவண்ணர் கேட்டார். அதில், இஸ்லாமியத்தை தன் லிங்காயத்துக் கொள்கைகளில் ஏற்றுக் கொண்டார் என்கிறார் இந்நுால் ஆசிரியர்.
பல மதங்களின் திருமணங்களை, இறுதியில் ஒப்பீடாகத் தந்துள்ளமை சிறப்பாகும்.
– முனைவர் மா.கி.ரமணன்