ஹோமோ டியஸ் என்றால், லத்தீன் மொழியில் மனித கடவுள் என்று பொருள். வருங்காலத்தில் உலகின் நிலை எப்படி இருக்கும் என்பதை விளக்கமாகவும், புதிய கண்ணோட்டத்திலும் இந்நுால் விவரிக்கிறது. இந்நுாலாசிரியர் இதற்கு முன் சேப்பியன்ஸ் என்ற நுாலை எழுதிப் புகழ் பெற்றவர்.
உலக அளவில் காணப்பட்ட, காணப்படும் நிகழ்வுகள் மற்றும் அதன் பின்னணி, அது ஏற்படுத்திய தாக்கம், விளைவு முதலியவற்றை அரசியல், பொருளியல், பண்பாட்டியல், மானிடவியல், புவியியல், அறிவியல் வழி விளக்கும் இந்நுாலை, நாகலட்சுமி சண்முகம் மொழிபெயர்த்துள்ளார்.
மனிதர்கள் வருங்காலங்களில் எதிர்கொள்ள வேண்டிய சவால்களை எடுத்துக் கூறும் சில அரிய செய்திகளை முன் வைக்கிறது. வரலாற்றில் நிகழ்ந்த போர்களின் அடிப்படையில் சந்திக்க வேண்டிய சவால்கள், எபிகூரிய வாதத்தின் அடிப்படையில், மனிதரிடம் காணப்பெற்ற மகிழ்ச்சியை உயிர் வேதியியலோடு தொடர்புபடுத்த முயலும் ஆய்வுகள் ஆகியவற்றை விவரிக்கிறது இந்நுால்.
மனிதர்களை கடவுளராக உயர்த்தும் முயற்சியில் காணப்பெறும் மூன்று செயல்முறைகள், வெளிநாட்டில் வளர்க்கப்பட்ட புல்வெளிக் கலாசாரம், வேளாண் மதங்கள் பற்றிய செய்திகள், விலங்குகளின் நடத்தைகள், போப்பாண்டவர் பற்றிய குறிப்புகள், மனித வாதப் பிரிவினை, இஸ்லாமிய அடிப்படை வாதம், தொழில்நுட்பத்தின் சாதக பாதகங்களை உலகளாவிய சிந்தனைகளோடு அணுகுகிறது இந்நுால்.
மனித குலத்தைப் பாதுகாப்பதற்கான விடைகளை அலசும் இந்நுால், பல தரப்பட்ட தரவுகளின்படி எழுதப்பட்டுள்ளது. புகழ்பெற்ற சேப்பியன்ஸ் என்ற நுாலைத் தமிழில் பெயர்த்தவரே இந்த நுாலையும் மொழிபெயர்த்திருக்கிறார். மொழிபெயர்ப்பு என்று தெரியாதவாறு, இயல்பான நடையில், படிப்பதற்கு இடையீடு இல்லாமல், இலகுவாக புரிந்து கொள்ளும்படி உள்ளது.
– ராம.குருநாதன்