அருணகிரி நாதர் இயற்றிய திருப்புகழ் பாடல்களின் பொருளை உணர்ந்து ஓதி மகிழ்வதற்கேற்ப, உரை விளக்கம் வழங்கப்பட்டுள்ள நுால். துவக்கத்தில் அருணகிரி நாதரின் வரலாறு தரப்பட்டு உள்ளது. இளம் பருவத்தில் பெண் மோகம் கொண்டு அலைந்திருந்தவர், பின்னாளில் உணர்ந்து, முருகனருள் நாடித் தவமிருந்து, அளவிலாப் புலமை பெற்றதிலிருந்தே தடுத்தாட் கொள்ளப்பட்டது புலனாகிறது. அருணகிரி நாதர் இயற்றிய பல ஆன்மிகப் பாடல் நுால்களில் ஒன்று திருப்புகழ். முருகனே கேட்டு மயங்க வல்ல முத்தான தொகுப்பு.
ஆன்மிகக் கதைக் குறிப்புகள் மட்டுமன்றிச் செறிந்த தத்துவங்களும், மனிதநேய அறங்களும் உள்ளடங்கிய கருத்துகளைக் கொண்டது. அதில், பாடல் ஒவ்வொன்றுக்கும் வண்ணக் குழிப்பு எனப்படும், இனிமை மிக்க தத்தகாரம் குறிப்பிடப்படுவது உண்டு.
அருணகிரி நாதரின் அருந்தமிழ் புலமைக்கு ஒரு அற்புத எடுத்துக்காட்டாக விளங்கும் வல்லின வண்ணப் பாட்டான, ‘முத்தைத்தரு பத்தித் திருநகை’ உள்ளம் ஈர்க்கும் தத்தகார ஒலிச்சுவையும், தனித்ததொரு இலக்கண வரையறையும் கொண்டது. நாவினிக்கும் செறிந்த பாடல்களுக்கு, எளிமையாக விளக்கம் தர முயன்றிருப்பது தெரிகிறது. ஆழ்ந்து படித்து மகிழலாம்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு