கிரேக்கத்தில் மனிதன் அறிவியல் வெளிச்சம் பெறும் முன், மக்களை ஊக்கப்படுத்துவதற்கும் அச்சுறுத்துவதற்கும் புனைந்த கதைகளின் தொகுப்பு நுால். மலையில் வாழும் தெய்வங்களாக வரிக்கப்பட்ட கற்பனையான ஒலிம்பியன் கடவுள்களை மையப்படுத்திய கிரேக்க தொன்மத்தில் உக்கிரமும், சாகசங்களும் நிறைந்த கதைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஆதித் தெய்வத்தில் துவங்கி, நாகரிக வளர்ச்சிக்கு முந்தைய கிரேக்கத் தொல் மனிதனின் வாழ்க்கையை எடுத்துக்காட்டுபவையாக உள்ளன. கிரேக்கர்களால், ‘ஸீயஸ்’ முழுமுதல் கடவுளாகச் சித்தரிக்கப்பட்டு தொடரும் இதிகாசக் கதைகளில் பொதிந்துள்ள உளவியல் கூறுகள், கற்பனை வளம், படைப்பாக்கம் போன்றவை, கிரேக்க நாகரிகத்தின் துவக்க நிலையை காட்டுகின்றன.
கிரேக்கம், ரோம், பாரசீகம், எகிப்து, சீனாவில் தோற்றம் பெற்ற தொன்மக் கதைகள் பகுத்தறிவுக்கு ஒவ்வாதவையாக இருப்பினும், அவற்றில் இழையோடும் விந்தையான கற்பனை, பல்வேறு மொழிகளின் பிற்கால இலக்கிய வளங்களுக்கும், வரலாறுகளுக்கும் அடிப்படையாக இருப்பதை அறிய முடிகிறது. இதிகாசத் தொடக்கங்களை அறிய உதவும் நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு