கட்டாயத்தால் இல்லாமல் நல்லுறவில் மலரும் காதலை மையப்படுத்திய நாவல். மனதளவில் நேசித்தாலும், காலச்சூழல் அதை வெளிக்காட்டாமல் கொண்டு செல்கிறது. நாவலின் உந்து சக்தியாக, சக்தி, திவ்யா கதாபாத்திரங்கள் உள்ளன. உதவி செய்ததற்கு நன்றிக் கடனாக, காதலை கேட்கலாமா என்ற கேள்வியை முன் வைக்கிறது.
ஒரு வரனை ஏற்பதும், நிராகரிப்பதும் பெண்ணின் உரிமை என கூறுகிறது. கேள்வி கேட்பதாலேயே, பெண்ணை கேலிப் பொருளாக பார்க்கக் கூடாது என உணர்த்துகிறது. மரணம், உறவில், வாழ்வில் ஏற்படுத்தும் விளைவுகளை பேசுகிறது. காம உணர்ச்சிகளை துாண்டாத வகையில், காதலை நாகரிகமாக நகர்த்திச் செல்கிறது.
அநாகரிக காதலின் அவலங்களை பின்னுக்கு தள்ளி, நல்லுறவை பேணும் கருத்தை கொண்டுள்ளது. காதலின் எதிரி கதாபாத்திரத்தை, கொடுங்கோலாக காட்டாமல் மனதை தொட்டு செல்கிறது. அடுத்தடுத்த நகர்வில், மர்ம முடிச்சு அவிழும் வகையில் சுவாரசியமாக விவரிக்கிறது. அழகியலை, கண்ணியத்தோடு விவரிக்கும் நுால். கதை, நாவல் எழுத துடிப்போர் வாசிக்கலாம்.
– டி.எஸ்.ராயன்