மதுரையில் புகழ்மிக்க ஜமீன் வம்சத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தை பற்றிய நாவல். பாசமும், வீரமும் ஒரு குடும்பத்திற்கு மட்டும் உரித்தானதல்ல. அது, அந்த மண்ணின் மைந்தர்கள் அனைவருக்குமானது. அப்படி பார்க்கையில் இதை நடந்த கதை என்றும் சொல்லலாம்; நடக்கும் கதை என்றும் சொல்லலாம் என்ற விளக்கத்தோடு கதை இமயத்தில் துவங்குகிறது.
கல்லுாரி விரிவுரையாளரான சேகரன், அவரது மாமா மாறவர்மன் குடும்ப உறவுகளுக்கு இடையே நடக்கும் பாசப் போராட்டமே பிரதானம் என்றாலும், இந்த நாவல் சொல்லும் சேதி, ‘தர்மம் வெல்லும்; அதற்காக சில கொலைகள் நியாயம் கொள்ளும். தீவிரவாதம் ஒழிப்போம்’ என்பதே.
சரித்திர காலத்தையும் சம காலத்தையும் மிக நுணுக்கமாய் பிணைத்து, பாத்திரங்களும், சம்பவங்களும் வடிக்கப்பட்டுள்ளன. பாசத்திற்காக ஆயுதம் துாக்கும் கங்காவின் 16 ஆண்டு கால தலைமறைவு வாழ்க்கைக்குப் பின் உள்ள மர்மங்கள், கர்ப்பிணி தாயை ஏமாற்றிய செவிலிக்கு ஏற்பட்ட பாதிப்பு, தீவிரவாதத்திற்கு துணை போகும் மத்திய அமைச்சர் குடும்பத்திற்கு நேரும் கதி, போலீஸ் அதிகாரி சேஷாத்திரியின் மதிநுட்பம் என, புதிர் அறுக்கும் நாவலின் பக்கங்கள் விறுவிறுப்பு.
–
பெருந்துறையான்