குடும்ப உறவுகள், காதல் உணர்வுகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கை வளங்களை பாதுகாத்தல் போன்ற சமூக நலம் சார்ந்த சிறுகதைகளின் தொகுப்பு நுால். இயற்கை வளங்களை சேமிப்பது, சுற்றுச்சூழல் மாசடைவதை தடுப்பது போன்ற செயல்களில், அலட்சியப் போக்கையும் அக்கறை இன்மையையும் பதிவு செய்கிறது.
இவற்றை நடைமுறைப்படுத்த முயலும் முதியவருக்குப் பைத்தியக்காரப் பட்டம் சூட்டுவது வேதனை தருகிறது. மோசடிகள் பெருகிவிட்ட காலத்தில், காதல் முரணை, இணையதள மோசடியாக வெளிப்படுத்தி இருப்பது வித்தியாசமாக உள்ளது.
காதலில் தோல்வியுறும் போது, வாழ்வை மீட்டெடுத்து செம்மையாக்கும் பொறுப்பை, ‘முதலா? முடிவா?’ என்ற கதை விளக்குகிறது. உயிருக்கு இறுதி நேரும் தடைகள் பலவரினும் கலங்காது வாழ்க்கையை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையை ஊட்டுவதாக அமைந்துள்ளது ‘ஒரு ஜீவன் துடித்தது’ என்ற கதை. குடிமைப் பண்புகளை வளர்க்கும் சிறந்த நுால்.
–
புலவர் சு.மதியழகன்