கோவிலூர் மடாலயம், கோவிலூர்-630 307. பக்கம்: 486.
சங்க இலக்கியங்களான எட்டுத் தொகை நூல்களுள் குறுந்தொகையைப் புலவர்கள் நல்ல குறுந்தொகை என்று அடைமொழி கூறிப் போற்றி மகிழ்வர். இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ என்பவர். இந்நூலில் உள்ள 401 பாடல்களை 205 புலவர்கள் பாடியுள்ளனர். சில புலவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளனர். பத்துப் பாடல்களின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. இந்நூலில் உள்ள பாடல்கள் 4 அடி முதல் 8 அடி வரை உள்ளன.
இந்நூலில் வரும் `யாயும் ஞாயும் யாராகியரோ' என்னும் பாடல், காதல் அன்பின் உயர்வைத் தெரிவிக்கும் பாடலாகும். இப்பாடலை உலகில் சிறந்த குறும்பாடல் எனக் கருதி, லண்டன் நகரில் பூமிக்கு அடியில் ஓடும் சுரங்கத் தொடர் வண்டியில், ஆங்கில மொழி பெயர்ப்புடன் அச்சிட்டு வைத்துள்ள செய்தியை நாம் அறிந்து மகிழலாம் (பக்-21).
பூப்பெய்தியத் தலைவி `கோழி கூவி விட்டது' என்று கூறுவதை `இடக்கர டக்கல்' என்றும், இது பாலியல் நெறி பற்றியது என்றும் அள்ளூர் நன்முல்லையார் பாடலின் உரையில் ஆசிரியர் எழுதியுள்ளது அவர் தம் புலமையாற்றலுக்கு எடுத்துக்காட்டாகும் (பக்.199-200).
கபிலரின் பாடலை (288) விளக்கிய உரையாசிரியர், அப்பாடலின்; `...இனத்தின் இயன்ற, இன்னாமையினும் இனிதோ, இனிதெனப் படூஉம் புத்தேள் நாடே?' என் அடிகளை உலக இலக்கியச் சிறப்புடையது என்று கூறுவது, கபிலர்க்கு மட்டுமன்று; தமிழர் அனைவருக்கும் பெருமை தருவதாக உள்ளது (பக்.342). இந்நூலில் உரையாசிரியரின் சிறப்புக் குறிப்புகள் படிப்போருக்கு மிகவும் பயனுள்ளவையாக இருக்கும் என்று உறுதியாகக் கூறலாம். நூலில், தெளிவுரையும், அருஞ்சொற்பொருளும் அருமையாக அமைந்துள்ளன.
சங்க இலக்கியம் படிப்பது, தேன் சுவைப்பது போன்றது என இந்நூல் படித்தால் உணரலாம்.