தேவா பப்ளிஷிங் ஹவுஸ், 2634, தெற்கு மெயின் தெரு, தஞ்சாவூர்-9. போன்: 04362-232919. (பக்கம் 112) சாப்பாடு கிடைக்காமல் கஞ்சி குடிப்பது வளர்ச்சியின் அறிகுறி அல்ல. ஆனால், சித்த மருத்துவரான ஆசிரியர் கேழ்வரகு, கம்பு, புழுங்கல் அரிசி, ஏன் மாமிசம் கலந்த கஞ்சியில் பல வகைகளை இந்த நூலில் விளக்கி தயாரிப்பு முறைகளைக் கற்றுத் தருகிறார். அதற்கான மருத்துவப் பயனும் தரப்பட்டிருப்பதால் கஞ்சி மீதான மதிப்பு அதிகரிக்கிறது. "கஞ்சி' என்பது "இனிதாகக் காய்ச்சுதல்' என்ற முன்னுரை இந்த நூலின் மகத்துவத்தை உணர்த்துகிறது. இதில், ஆயுர்வேத மருத்துவ அடிப்படையில் கஞ்சி தயாரிப்பும் அடங்கியிருக்கிறது. கஞ்சி தயாரிப்பு, செய்முறை, தீரும் நோய் என்று விளக்கப்பட்டிருக்கிறது.வடைக்கஞ்சி, கிருமிகளை அகற்றும் கஞ்சி, கஞ்சிக்கும் சூப்புக்கும் வேறுபாடு என்ன? பாயசம் அல்ல கஞ்சி என்றும் விளக்கப்பட்டிருக்கிறது. கோழிக்குஞ்சு, ஆட்டின் கால் வைத்துத் தயாரிக்கப்படும் கஞ்சி தயாரிப்புகளும் தரப்பட்டிருக்கின்றன. நூலின் கடைசியில் அரும்சொற்பொருள் அகராதி இருப்பதால், மருத்துவப் பெயர்களுக்கு ஏற்ற ஆங்கிலத்தை அறியலாம். நல்ல பயனுள்ள நூல்.