கடந்த, 1930களில் இந்தியாவில் நிலவி வந்த ஆன்மிக நம்பிக்கைகளைப் பற்றிக் கேள்விப்பட்டு இந்தியாவுக்கு வந்த ஆங்கிலேயர் பால் ப்ரன்டன். முதலில் வட மாநிலங்களில் உள்ள யோகிகள், சாதுக்கள் ஆகியோரைச் சந்தித்து விட்டு, தென் இந்தியாவை நோக்கிப் பயணப்பட்டு, வழியில் கிடைத்த அனுபவங்கள், சந்தித்த மனிதர்களிடமிருந்து தெரிந்து கொண்டவை, ஆகியவற்றுடன் திருவண்ணாமலையில் பகவான் ரமண மகரிஷியைச் சந்திக்கிறார், பால் ப்ரன்டன். இங்கு அவருக்கு கிடைக்கும் ஆன்மிக ஞானம் மூலம் வியக்கத்தக்க ஆன்மாநுபூதி பெறுகிறார் அவர்.
தனது பயணத்தில் பல மகான்களைச் சந்தித்து ஆன்மிகம் குறித்து, பேசியவைகளைப் படித்துப் பார்க்கும்போது, புரியாத பல விஷயங்கள் நமக்குப் புரிகிறது. நமது வேதகால உபநிஷதங்களின் ஆழமான கருத்துகளை, கேட்டுத் தெரிந்து கொண்டு அவற்றை அழகாக விவரித்தும் எழுதியிருக்கிறார், பால் ப்ரன்டன். தமிழில் மொழி பெயர்த்துள்ள புவனா பாலு பாராட்டுக்குரியவர். நூலை அழகுற, நிறைய புகைப்படங்களுடன் சிறப்பாகத் தயாரித்திருக்கிறது கண்ணதாசன் பதிப்பகம்.
ஜனகன்