தென்னிந்திய ஆராய்ச்சி கழகத்தின் முயற்சியால், இப்புத்தகம் வெளிவந்திருக்கிறது. மொத்தம், ஒன்பது அலகுகள், இதில் இடம் பெற்றிருக்கின்றன. மின் மூலங்கள் முதல் கேள்வி – பதில் பகுதி வரை, திட்டமிட்ட மின் வழிமுறையை இந்நூல் ஆசிரியர் கையாண்டுள்ளார்; இன்றைய வாழ்க்கையில், தொழிற்சாலைகளின் பங்கு அத்தியாவசியமானது.
தொழிற்சாலைகளுக்கு, பெரும் பாரமாகவும், சவாலாகவும் இருப்பது மின்சாரம்; சரியான கட்டணத்தில், தட்டுப்பாடின்றி மின்சாரம் கிடைக்க வேண்டும். கிடைக்கும் மின்சாரத்தை வீணாக்காமல் சிக்கனமாக எப்படி உபயோகப்படுத்துவது என, மின் நிர்வாகம் பற்றி, தொழிற்சாலை தொடர்புடையவர்களுக்கு தேவையான படவிளக்கங்களுடன், விளக்கங்களும் தரப்பட்டுள்ளன.
‘மின்தரம் பற்றி பெரும்பான்மையினர் கவலைப்படுவதில்லை. மின்சாரம் கிடைத்தால் போதும் என்ற மனநிலையில் தான், பல நுகர்வோர் உள்ளனர். உண்மையில், தரமற்ற மின்சாரம் உண்டாக்கும் பழுதுகளினால் ஏற்படும் பொருளாதார நஷ்டத்தை விட, மின்சாரம் இல்லாமல் அடையும் நஷ்டம் குறைவு’ போன்ற கருத்துகளுடனும், இப்புத்தகம் மிளிர்கிறது.
தமிழில் தொழிற்சாலைகள் தொடர்பான புத்தகங்கள் மிக குறைவு. அந்த வகையில், வெளிவந்திருக்கும் இப்புத்தகம் வரவேற்கத்தக்கதே!
சி. கலா தம்பி