ஏழு வகையில் திருக்குறளுக்கு எழிலான, புதிய வழியில் சிந்தித்து உரையாக்கம் செய்யப்பட்டுள்ள நுால்.
சொற்களாக பிரித்த வடிவம், சொற்பொருள், பொழிப்புரை, கருத்துரை, விளக்கவுரை, இலக்கணக் குறிப்பு, அணி நயம் என, அரும்பொருள் கண்டுள்ளார். குறள் கூறும் இயல்புடை மூவர் என்பதை, பெற்றோர், குழந்தை, அரசர் என காட்டுவது இதுவரை உரைக்காதது ஆகும்.
‘எழு பிறப்பு’ என்பதை ஏழு வகை பிறப்பு என்று இதுவரை விளக்கம் தந்ததற்கு மாறாக ‘இனி எழுகின்ற பிறப்பு’ என வகுத்துள்ளார். குறளில், ‘அளறு’ என்பதை நரகம் என்று விளக்கியுள்ளனர். ஆனால் இவர் மட்டும், பாவச்சேறு என்று உரைக்கிறார்.
குறள் எண், 1023ல், ‘தெய்வம் மடிதற்றுத் தான் முந்துறும்’ என்ற பதத்துக்கு, ‘தெய்வம் ஆடையை இறுக்கக் கட்டி உதவ ஓடி வரும்’ என பொருள் கொள்வர். இந்த உரையில், ‘ஊழ் நல்வினை ஆடையை இறுக்கக் கட்டி தானே முன்வரும்’ என பொருள் கொள்ளப்பட்டுள்ளது.பகுத்தறிவாளருக்கு புதிய சிந்தனையைத் துாண்டும் நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்