குயில் வெளியீடு, எச்9, காந்தி நகர், புதுச்சேரி - 605 009. (பக்கம்: 152)
பிரான்ஸ் நாட்டின் ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரி விடுதலை பெற்று 50 ஆண்டுகள் ஆகிறது. சமீபத்தில் தான் புதுவை தனது விடுதலை பொன் விழாவை கொண்டாடியது. பிரஞ்சு நாட்டின் பகுதியாக புதுவை இருந்தாலும், ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக நாடு முழுக்க எழுந்த பேரெழுச்சிக்கு ஊக்கமாக அமைந்தது இந்த மண்.
பாரதியார், பரலி சு.நெல்லையப்பர் போன்ற தேசிய நெஞ்சங்கள் இந்த மண்ணில் இருந்து கொண்டுதான் விடுதலைப் போரை நடத்தினர். சாவர்க்கர், நீலகண்ட பிரம்மச்சாரி போன்ற புரட்சி தளபதிகளின் படையில் வீரர்களாக பணியாற்றிய வா.வே.சு., அய்யர், மாடசாமி, வாஞ்சி நாதன் போன்றவர்களும் புதுவையில் பதுங்கிதான் தங்கள் தளத்தை விரிவுப்படுத்தினர்.
பொன் விழா கொண்டாடும் இந்த நேரத்தில், புதுவையில் நடந்த வரலாற்று சம்பவங்களை தொகுத்து புதுவை கோ.பாரதி எழுதியுள்ளார். இவர் பாரதிதாசனின் பேரன். வரலாற்றுச் சம்பவங்களுடன் மிக அரிய புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன. அக்காலத்து புதுவையை காண விரும்பும் இக்கால தலைமுறைக்கு இந்த அபூர்வ புகைப்படங்கள் உதவும்.