இராஜராஜன் இராஜ மாறன் பதிப்பகம், 28, மேற்கு வட்டச் சாலை, மந்தைவெளிப்பாக்கம், சென்னை28. (பக்கம்: 572. விலை: ரூ.200).
"ஓம்' என்ற ஓரெழுத்துப் பிரணவ மந்திரத்தை முருகன், சிவனுக்கு உபதேசித்தார். "நீ' என்னும் ஒரு சொல்லின் பல் வேறு பரிமாணங்களை இந்த நூலாசிரியர் நமக்கு விளக்குகிறார்.
திருவள்ளுவரில் தொடங்கி இக்காலப் புலவர்கள் வரையில், "நீ' "நீ' என்று பட்டியல் இட்டுக் காட்டுகிறார். 100 கவிஞர் கள் வரை நீளமாக "நீ'யை இங்கே விளக்குகிறார்.
திருக்குறள், கம்ப ராமாயணம், திருவாசகம், சிலப்பதிகாரம், நாலடியார், அகநானூறு, சுந்தரர் தேவாரம், இராமலிங்க வள்ளலார் அருட்பா, சித்தர் பாடல்கள், நாட்டுப்புறத்தில் பாடும் காட்டுப் பாடல்கள், பாரதியார், பாவேந்தர், இந்திரஜித் பாடல்கள் வரை "நீ' என்ற ஒரு எழுத்துக்காக நீச்சலடித்துக் கரை தொட்டுள்ளார் கொடைக்கானல் காந்தி.
""மண்ணுருசி "நீ' அறிவே, மரத்துருசி நீ அறிவே
பெண்ணுருசி "நீ' அறிவே, போடா சிறுபயலே''
என்ற காட்டுப் பாடலும், "பட்டாங்குயானும் ஓர் பத்தினியே யாமாகில், ஓட்டேன் அரசோடு ஒழிப்பேன் மதுரையும் என் பட்டிமையும் காண்குறுவாய் நீ' என்ற கண்ணகிப் பாடலும் ஒரு சேரப் படிப்போருக்கு "நீ' மனதில் நீட்டுகிறது மகிழ்வை.
விழியிழந்த விஷயங்கள் கவியும், பலர் அறியும் வைர முத்து கவிதையும் என, கவிஞர்களின் கலைக்களஞ்சியமாய் "நீ' ஒளிர்கிறது! நீளமான கட்டுரைகள் நீலமான கடலாக பற்பல அற்புதங்கள் நீள்கிறது இந்த நூலில்! "நீ'க்காக நீங்கள் படிக்கலாம்!