பாரதிதாசன் உயராய்வு மையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், பல்கலைப் பேரூர், திருச்சி 620 024. (பக்கம்: 512. விலை: ரூ.265)
பாட்டினால் புதுமை செய்தவர் பாரதியார்! பாட்டினால் புரட்சி செய்தவர் பாவேந்தர்! தஞ்சைப் பல்கலைக்கழகம் பாரதியார் பாடல்களை முழுமையாகக் கால ஆய்வுடன் வெளியிட்டுள்ளது. அதுபோல பாரதிதாசன் முழுப் பாடல்களையும் கால ஆராய்ச்சி, பாட்டுச் சூழல், விளக்கங்களோடு பாரதிதாசன் பல்கலைக்கழகம் இந்த முழு நூலை அழகிய அச்சில், பிழையின்றி வெளியிட்டுள்ளது பாராட்டுக்குரியது. பாவேந்தர் பாடல்களின் செம்பதிப்பு இது!
நாட்டுடமை ஆக்கப்பட்ட பின் பல நல்ல நூல்களைக் கூட, கூட்டிக் குறைத்து, நீட்டிக் கெடுத்து அவரவர் தம் பெயரை நாட்டிக் கொள்ள பல நூல்களை வாட்டி வதைத்துள்ளனர். ஆனால், உண்மையிலேயே தேடலின் திறனும், பாடலின் நயமும் உணர்ந்த முனைவர் இரா.இளவரசு, தம் வாணாள் ஆய்வாக, இந்தக் கவிதைத் தொகுப்பை நுட்பமாக வடிவமைத்துள்ளார்.
பாவேந்தரின் பழம்பாடல், பழத்திற்காக 13 வயதில் எழுதிய பாடல் என 1904ல் தொடங்கி, பேறு பதினாறு என்று 5.8.1958 பாடலுடன் முடியும் இந்தப் பாட்டுப் பயணத்தில், அவருடன் நாமும் கவிப்பயணம் செய்கிறோம்! பாவேந்தரின் பக்திப் பாடல்களும், பகுத்தறிவுப் பாடல்களும் அவரது பரிணாம வளர்ச்சியின் பதிவுகளாக உணர்கிறோம். சமூக சிந்தனையும், இயற்கைக் காதலும், புரட்சி வேகமும் இந்தப் பயணத்தில் நம்மால் உணர முடிகிறது!
ஆய்வு என்பதின் அடையாளமே உள்ளதை உள்ளவாறு உணர்த்துதல் தான்! இந்தப் பதிப்பில் பாவேந்தர் குறிப்பும், பாடபேதங்களும் கலப்படம் இன்றி தரப்பட்டுள்ளதால், பாவேந்தரை நேரில் சந்தித்து விளக்கம் பெற முடிகிறது! 365 பாரதிதாசன் கவிதைகள் இந்த நூலில், புதிதாக கண்டறிந்து சேர்க்கப்பட்டுள்ளன! எண்ணி போற்றத்தக்கது!
காலக்குறிப்பு, வரிசை எண் தலைப்பு, பதிப்பாசிரியர் குறிப்பு, பாட வேறுபாடு, பாடல் வெளிவந்த இதழ்கள் மூலச் சான்றுகள், பாடல் மெட்டு, ராகம், தாளம், சுரக்குறிப்பு, யாப்பு குறிப்பு இத்தனை நட்சத்திர மின்னல்கள் நடுவே, நிலவாக பாவேந்தர் பாட்டு ஒளிர்கிறது. 11 தியாகராஜ கிர்த்தனைகளைப் பாவேந்தர் தமிழாக்கியிருப்பது இசைத் தமிழுக்கு இனிய வரவாகும்!
"ஆரிய நாடு சுகம் பெற இன்னும், அரைக்ஷணம் உள்ளதென்றாள்' (பக்.62)
"காணும் பொருளில் எல்லாம் கண்ணா! உன் இன்னுருவம்,'
"கேட்கும் ஒலி அனைத்தும் கேசவா' (பக்கம்: 35) "புன்மைத் தொழில்புரி மகிடனை உறவொடு, சின்னப் பட உலகினில் அறம் நிலை பெற' பராசக்தி திருப்புகழ் (பக்கம்: 66). "சுருதி உரைத்த பல தெய்வங்களிலே நல்ல புல் அருந்தும் பசு மாடு... தெய்வமென்று தொழுவோம்' பசுத் தெய்வம் (பக்கம்: 67).
காளிக்கு விண்ணப்பம், லட்சுமி சரஸ்வதி வாழ்த்து, இப்படி பக்தி வெள்ளம் ஒருபுறம் கரை புரண்டு ஓடுகிறது! மறுபுறம் பகுத்தறிவு, நாத்திகப் பாடல்களோடு, பக்திப் பாடல்களும் சங்கமித்து படிப்பவரை வியப்பில் ஆழ்த்துகிறது. இதுவே பாவேந்தரின் பாநேர்மை!
நடிகர் சிவாஜியையும், பாவேந்தர் 1960ல் பாராட்டிப் பாடியுள்ளார். "நன்று சிவாஜி கணேசன் நடிப்பது போல், இன்று வரை யாரும் நடித்ததில்லை வென்று, கலையாளியின்சீர் கவிழ்க்கத் துடிக்கும், மலையாளி வாழ்வதும் உண்டு.' (பக்கம்:385). சினிமாவை கவர்ச்சி உடை நடிகைகள் கலக்கி சீரழிப்பதை 17.11.1959லேயே பாவேந்தர் கண்டித்துப் பாடியுள்ளார். "படத்தில் நடிக்க வரும் பெண்கள் மக்கள், பணத்தை பறிப்பதற்காக, உடுக்கை இலாதும் நடிப்பார்கள்" (பக்கம்: 379). 13 வயது முதல் 73 வயது வரை பாவேந்தர் எழுதிய பாடல்கள் கால வரிசைப்படி