உயிர்மை பதிப்பகம், 11/29, சுப்ரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை-18. (பக்கம்: 152).
சர்வதேச இலக்கியப் பார்வை உடைய சாரு நிவேதிதா, நிறைந்த வாசக அனுபவமிக்க ஒரு எழுத்தாளர் என்பதை இந்தக் கட்டுரைத் தொகுதி மூலம் நாம் அறிந்து கொள்கிறோம். உலகின் பல நாடுகளுக்கும் பயணம் செய்துள்ள இவர், அந்த அனுபவங்களையும் தனது எழுத்துக்களில் இலக்கிய அனுபவமாக நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். தமிழ் எழுத்துலகில் மிகவும் வித்தியாசமானவர் இவர்.
பிரெஞ்ச் ஆதிக்கத்தில் இருந்த மொராக்கோ நாட்டு ஆதிக்க அரசியலையும், அவர்களின் வெங்கொடுமைக்கு ஆளான எழுத்துப் பிரஜைகளையும் தமிழ் வாசகர்களுக்கு அற்புதமாக அறிமுகப்படுத்தியிருக்கிறார். அரபு மொழியின் வளமையும், செழுமையும், அதைக் கையாண்ட எழுத்தாளர்களின் படைப்பாற்றலும் மிகச் சிறப்பாக நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். உலகின் மிகச் சிறந்த திரைப்பட இயக்குனர்களைப் பற்றிக் கூட அவர் இந்த நூலில் எழுதியுள்ள அநேகதகவல்கள், தமிழர்களுக்கு மிகவும் புதிது.
இந்தப் புத்தகத்தின் மிகச் சிறந்த கட்டுரை என்று இப்ன்பதூதாவின் "ரிஹ்லா' என்ற கட்டுரையைச் சொல்லலாம். துக்ளக்கின் ஆட்சிக் காலத்துடன் தொடர்புடைய பதூதாவைப் பற்றி சாருநிவேதிதா எழுதியுள்ள விதம் மிக மிக அற்புதம்.
சொல்ல நினைப்பதை நேரடியாகச் சொல்லும் சாருவின் நெருடல் இல்லாத தமிழ் நடைக்கு பாராட்டு.
ஜெயகாந்தனைப் பற்றியும், ஜெயேந்திரரைப் பற்றியும் எழுதியுள்ள சாருவின் கட்டுரைகளை இந்தத் தொகுப்பிலிருந்து தவிர்த்திருக்கலாம். சாருவுக்கு அபிப்பிராய சுதந்திரம் நிச்சயமாக உண்டு. இந்த அருமையான, விசாலமான, வித்தியாசமான பார்வைகளைப் பதிவு செய்துள்ள அவருடைய கட்டுரைகளுக்கிடையே, இந்த இரண்டும் அவசியமாகவோ, தொடர்புடையதாகவோ தெரியவில்லை.
சாரு நிவேதிதா தமிழ் வாசகர்களை ரசனை ரீதியாக உயர்தளத்திற்கு இட்டுச் செல்லும் தகுதி படைத்தவர்.