விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை-2. பக்கம்: 160. விலை ரூ.130.
அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்காத பெண்களே உலகில் இல்லை என்று சொல்லலாம். எத்தனை வயதானாலும், மற்றவர்கள் மத்தியில் மாசு மருவற்ற மேனியழகியாக தன்னை காட்டிக் கொள்ள எந்தப் பெண்ணுமே ஆசைப்படுவாள். ஆனால், முக அழகைப் பராமரிக்க முடியாமல், தலைமுடியைப் பராமரிக்கத் தெரியாமல், கை, கால்களைச் சுத்தமாக வைத்துக் கொள்ள இயலாமல், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளத் தெரியாமல் திண்டாடிப் போகிறாள். இவற்றை எல்லாம், ஒரே புத்தகத்தின் வாயிலாக பெண்களுக்கு மிக அழகாக விளக்கும் புத்தகத்தை வசுந்தரா தந்திருக்கிறார்.உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரையிலான அனைத்து பகுதிகளையும் பராமரிக்க
எளிமையான குறிப்புகளை தருகிறார். தலைமுடியை பராமரிக்கத் தேவையான பொடிகள், ஷாம்பூ வகைகள், முடியை "கலர்' செய்து கொள்வதால் உண்டாகும் நன்மைகள், தீமைகள், காஜல் இடுவதால் ஏற்படும் அழகு மற்றும் தவறாகப் பயன்படுத்தினால் ஏற்படும் அழகின்மை, நகங்களை சுத்தமாகப் பராமரித்து, அழகாக மாற்றுவது, உடலை "ஸ்லிம்'மாக வைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் உட்பட எல்லாவற்றையும் விளக்குகிறார். அவள் விகடன் இதழில் வெளிவந்த வசுந்தராவின் குறிப்புகள் இதில் தொகுப்பாக வெளிவந்துள்ளன.அடுத்த புத்தகத்தை வசுந்தரா தனியாக எழுதும்போது, பாதிப்பு மற்றும் சிகிச்சை ஆகியவற்றுக்கான அறிவியல் விளக்கங்களுடன் எழுதினால் பெண்களுக்கு மேலும் பயனுள்ளதாக இருக்கும்.