ஸ்ரீ செண்பகா பதிப்பகம், ப.எண்.24, கிருஷ்ணா தெரு, தி.நகர், சென்னை17. (பக்கம்: 112. விலை: ரூ.35).
உலகளவில் எப்போதும் சமையல் குறிப்புகள் அடங்கிய புத்தகங்களுக்குத் தான் அதிகமான கிராக்கியும், விற்பனையும் உண்டு! இதை மெய்ப்பிக்கும் வண்ணம் வெளிவந்துள்ளது இந்த ஆங்கில நூல்!தற்கால ஜெட் யுகப் பெண்மணிகளுக்கு, எலெக்ட்ரிக் (மின்) ரைஸ் குக்கர் புராண காலத்து "காமதேனு' போன்று ஒரு வரப்பிரசாதம்!
ஆயினும், "ரைஸ் குக்கர்' என்றாலே சாதம் மட்டும் தானே சமைக்க முடியும்... அதற்காக இவ்வளவு விலை கொடுத்து வாங்குவதா... என்ற நினைப்பில் இருக்கும் சகோதரிகளுக்கு இனிய அதிர்ச்சி அளிக்கும் விதமாக இந்நூலாசிரியை 84 விதமான பதார்த்தங்களின் சமையல் குறிப்புகளை வழங்கி அசத்தியிருக்கிறார்! செய்முறை விளக்கவுரைகளுடன் தேவைப்படும் பொருட்கள், கால அவகாசங்கள் எளிய ஆங்கில நடையில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வகை குக்கருக்கு அறிமுகம் இல்லாத பெண்மணிகளுக்காக கையாளும் முறைகள் பின்பற்ற வேண்டிய, கூடாத எச்சரிக்கைகளும் உண்டு.
இந்நூலில் நாம் அனைவரும் நன்கு அறிந்த புலாவ், பிரியாணி, பொங்கல் உள்ளிட்ட சாத வகைகள், பாயசம், கீர் மற்றும் காஞ்சிபுரம் இட்லி, கொத்சு, மாங்காய் தொக்கு பற்றிய செய்முறை விளக்கங்கள் இடம் பெறுகின்றன. மேலும் "த்ரீ இன் ஒன்' ரக மூன்று விதப் பதார்த்தங்களை ஒரே சமயத்தில் சமைத்து வியப்படையச் செய்யும் உத்திகளும் தரப்பட்டுள்ளன. உதாரணம்: சாதம் + கத்தரிக்காய் பிட்லா + உருளைக் காரக்கறி (பக்.9496), தேர்ந்தெடுக்க வசதியாக, பதார்த்தங்கள் பற்றிய பொருடளக்கம் இடம் பெறாதது ஒரு சிறு குறை!