விஷா பப்ளிகேஷன்ஸ், புதிய எண்.16, பழைய எண்.55, வெங்கட் நாராயணா சாலை, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 272)
வாழ்க்கை என்றால் என்ன, அதை எவ்வாறு வாழ வேண்டும் என்று அறிந்து வாழ்வதற்கு குருவின் துணை வேண்டும் என்று குருவழி என்னும் இந்த நூலில் பாலகுமாரன் தெரிவித்துள்ளார். ஒரு குருவிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும். எப்படி நடந்து கொள்ளக்கூடாது என்பதற்கு யோகி ராம் சுரத் குமாரிடம் அவர் நடந்து கொண்ட முறையிலிருந்தே விளக்கம் அளிக்கிறார்.
`ஒரு மனிதனின் பிறப்புக்கு மாதாவும் பிதாவும் காரணம். வளர்ச்சிக்கு குரு காரணம். வளருகின்ற மனிதனைத் தான் உலகம் மதிக்கிறது, நேசிக்கிறது. அப்படி மனிதன் வளர ஒரு வழிகாட்டி அவனுக்குத் தேவையாக இருக்கிறது. அவன் உள்ளும் புறமும் எழும்பும் கேள்விகளைக் காது கொடுத்துக் கேட்டுப் பதில் சொல்கின்ற ஒரு தெளிவான வழிகாட்டி அவசியமாகிறது. அந்த வழிகாட்டிக்குப் பெயர் குரு என்று கூறும் பாலகுமாரன் ஆசிரியரையும், அலுவலகத்தில் வேலை கற்றுத் தருபவரையும் துறவியையும் குரு ஒன்று ஒப்புக் கொள்ளவில்லை.
வாழ்க்கைக்கு வழிகாட்டும் குருவானவர் நம் மனத்தில் தோன்றும் எண்ணங்களைக் கூட உணர்ந்து அதற்கேற்ப நடந்து கொள்வார் என்பதைப் பல நிகழ்வுகளின் மூலம் காட்டியுள்ளார் . சடங்குகளும் வேதங்களும் உண்மையான இறை நிலைக்கு வழிகாட்டுவதில்லை. பக்தி என்பது மனம் சம்பந்தப்பட்டது. பக்தியை அடைவதற்காகச் செய்யும் ஏற்பாடுகளால் அந்த பக்தி நிலையை அடைய இயலாது என்பதற்கும் பல சான்றுகளைக் கூறியுள்ளார்.
படிப்பவர்களைக் கையைப் பிடித்து அழைத்துச் செல்வது போன்ற பாலகுமாரனின் மொழிநடையை இந்நூலிலும் காணமுடிகிறது.