பிரேமா பிரசுரம், 59/2, ஆற்காடு சாலை, கோடம்பாக்கம், சென்னை-24. (பக்கம்: 672).
கீதாச்சாரியனான பாண்டுரங்கன் தன் பக்தன் பொருட்டு, எத்தகைய தொண்டையும் - ஏன், இழி தொழில் என கருதப்படுவதையும், வீண் அபவாதங்களையும் கூட - ஏற்கத் தயங்காதவன்.
இவ்விதமாக ஈர்க்கப்பட்டதினால் தான், மகாகவி பாரதி கண்ணன் என் தாய், தந்தை, நல்லாசிரியன், சீடன், நண்பன், சேவகனாக மட்டுமின்றி தெய்வமாகவும் உயர்ந்தவன் என்றெல்லாம் கண்ணன் பாட்டுகள் எனும் தலைப்பில் பாடி வைத்தான்? விரிந்து, பரந்த தமிழாக்கம் செய்யப்பட்ட இந்த மராட்டிய மொழி மூல நூல் வாயிலாக, பாண்டுரங்கன் தனது பக்தர்களின் நலனைப் பேணிக் காத்து, உய்விப்பதுடன், அவர் தம் கீர்த்தி உலகம் அறிந்து போற்றப்பட வேண்டும் என்பதற்காக எவ்வாறெல்லாம் செயல்படுகிறான் என்பதை 75க்கும் மேற்பட்ட பக்தர்களின் சரிதங்கள் வாயிலாக நாம் அறியப் பெறுகிறோம். குயவர், நாவிதர், சக்கிலியர், இந்துக்கள் மட்டுமின்றி துருக்கியர் என ஜாதி மத இன வேறுபாடுகள் எதுவுமின்றி, பக்தர்கள் அனைவருக்கும் அருந்துணையாக பகவான் பாண்டுரங்கன் திக்விஜயம் செய்வதை இந்நூல் பறை சாற்றுகிறது.
குடும்பத் தலைவிகள் குழந்தைகளுக்கு கதை சொல்லும் அருங்கலையைக் கற்றுத் தரும் இந்த அற்புத பொக்கிஷம்! வண்ண அட்டைப் படங்கள், கட்டமைப்பு, அச்சுக்கோர்ப்பு, உட்புற ஓவியங்கள் இந்நூலின் பிற அணிகலன்கள்!