முல்லை நிலையம், 9, பாரதியார் முதல் தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 80. விலை: ரூ.20)
ஆசிரியரின் பஞ்சகோச வாழ்க்கை, பஞ்சகோச விவேகம் என்னும் பொருள் பற்றிய ஆய்வுச் சொற்பொழிவுகள் நூல் வடிவத்தில் வந்துள்ளது.
மனிதனின் வாழ்வு நிகழும் அன்னமய, பிராணமய, மனோமய, விஞ்ஞானமய, ஆனந்தமய கோச வாழ்க்கைகள் முறையே ஒன்றைவிட மற்றொன்று உயர்ந்ததாக உள்ளது. உதாரணமாக மனோமய கோசத்தில் வாழ்பவர் பொறிகளை அடக்க வேண்டும்; விஞ்ஞானமய கோசத்தில் பொறிகளை அடக்க வேண்டாம்; அவர்கள் மனம் ஆராய்ச்சியில் செல்வதால் பொறிவழிச் செல்வதில்லை (பக்.38).
கோச வாழ்க்கைகள் ஒவ்வொன்றிலும் கொடுத்துள்ள உதாரணம் அதைத் தெளிவுற தெரிந்து கொள்ள உதவுகிறது. சோம்பலை அமைதி என்றும், பயத்தைப் பொறுமை என்றும் கற்றவர்கள் பலர் ஏமாற்றம் அடைகின்றனர். அன்பே வைராக்கியம், வெறுப்பு அல்ல என்பவை பொன்னேட்டில் பொறிக்கத்தக்கவை (பக்.36).
பஞ்சகோச விவேகம் பற்றி தைத்திரீய உபநிஷத்தில் சொல்லியிருப்பதை சிறப்பாக ஆசிரியர் விவரித்துள்ளார். ஆத்மா ஆனந்தம் என்று அறியும் முயற்சியே பஞ்சகோச விவேகம் என்கிறார் ஆசிரியர் (பக்.64).
பஞ்சகோசங்களைப் பற்றி விரிவாக அறிய முயல்வோருக்கு இந்நூல் ஓர் வரப்பிரசாதமாகும்