கீதா பிரஸ், கோரக்புர், உத்தரப்பிரதேசம்- 273 005. (பக்கம்: 261)
பாகவதத்தில் பதினோராவது ஸ்கந்தமாக உத்தவ கீதை திகழ்கிறது. இது கிருஷ்ணருக்கும் உத்தவருக்கும் இடையில், கேள்வி - பதில் வடிவத்தில் நடந்த உரையாடல்.
சுகர் சொல்வதாக இந்த கீதை தொடங்குகிறது. யது குலத்தவர் செல்வச் செழிப்பினால் அகங்காரம் கொண்டு தவறுகள் செய்ய, மாசற்ற பெரியோர் சினங்கொண்டு அவர்களை சபித்தனர். அந்த சாபத்தை சாக்காக வைத்து முடிவில் கிருஷ்ணர் யது குலத்தை அழிக்கிறார்.
அழிப்பதற்குள், கிருஷ்ணர் உத்தவரின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறார்.
`மண், வாயு, ஆகாயம் போன்றவைகள் அனைத்திலிருந்தும் பொறுமை, கட்டுப்பாடு, எங்கும் வியாபித்திருக்கும் தன்மை என்ற குணங்களை எல்லாம் அறிந்து கடைப்பிடிக்க வேண்டும். மனித சரீரத்தைப் பெற்றவன் உலகப் பற்றுகளில் சிக்கி அழிவுறுகிறான். யோகியானவன் ஆசனங்கள், ஸ்வாசம் முதலியவைகளை வென்று வைராக்கியம், அப்பியாசம் மூலம் மனதை ஒரே இடத்தில் நிலை நிறுத்துகிறான். உத்தவரே! சத் சங்கம் (சான்றோரின் கூட்டுறவு) என்ற ஒரே சாதனையின் மூலம் யார் வேண்டுமானாலும் என்னை அடைய முடியும்' (பக்கம்:93).
`எந்த விருப்பமும் இல்லாதவன், பொறிகளை அடக்கியவன், சாந்தமும் சமபுத்தியும் வாய்க்கப் பெற்றவன், என்னிடத்தே மனத்தை நிலை நிறுத்தி நிறைவோடு இருப்பவன் - எங்கிருந்தாலும் பரிபூரண சாந்தத்தோடு இருப்பான்!' (பக்கம்: 107) என்கிறார் பகவான் கிருஷ்ணன்.
பிறகு கிருஷ்ண பரமாத்மா, பக்தி செலுத்துபவர்களுக்கு, தான் எந்தெந்த வடிவங்களில் தோன்றி மோட்சத்தை அளிக்கிறார் என்பதை விவரிக்கிறார். அத்துடன் சித்திகளிலேயே லயித்துத் திருப்தியுடன் இருப்பவர்கள் மோட்சம் அடைவதில்லை என்பதையும் சொல்கிறார்.
கிருஷ்ணர் கர்ம, பக்தி, ஞான யோகம், ஜபயோகம், தத்துவங்கள் இவைகளை விளக்குகிறார். ஒருவன் தன்னை உள்முகமாக நோக்கித் தன்னுடைய உண்மையான ஸ்வரூபத்தை உணர்ந்தால் சண்டைகள், சச்சரவுகள் ஏற்படாது என்ற பேர் உண்மைகளைப் பகர்கிறார் (பக்கம்:173).
ஞானயோகத்தில், `உத்தவரே, மனிதன் ஏராளமான வேற்றுமைகளை எங்கும் காண்கிறான்; ஆனால், அத்யாத்மிக நோக்கில் பார்க்கும்பொழுது அவன் வேற்றுமைகளைப் பார்ப்பதில்லை; எல்லாம் பரமாத்மஸ்வரூபமே என்பது புலனாகிறது. ஜனன - மரணங்கள் சுகம் - துக்கம் இவைகள் அனைத்தும் அகங்காரத்துக்கே; ஆத்மாவுக்கு அல்ல, என்பதை அறிகிறான். தவம், அப்பியாஸம், குருவின் உபதேசம் முதலியன மூலமாக மனிதன் மெய்யுணர்வைப் பெறுகிறான்' (பக்கம்: 218-223).
மேலும், `ஞானி பிராணிகளிடமும், நல்லவர் - கெட்டவர்களிடமும் சமநோக்குக் கொண்டுள்ளான். இதன் மூலம் எல்லாவற்றிலும் பரமாத்மாவையே காண்கிறான். இதைத் தான் பாகவத தர்மம் என்று சொல்கின்றனர்' என்கிறார்.
முடிவில் கிருஷ்ணரின் பரம பக்தனான உத்தவர் பதரி ஆஸ்ரமத்துக்குச் செல்கிறார். கிருஷ்ணன் வைகுண்டம் ஏகுகிறார். இந்த உத்தவ கீதையின் சாராம்சத்தை ஒரு வரியில் சொன்னாலும் அது, இது தான். `மெய்ப்பொருள் நாட்டம் ஆசையின் நாசம்'!
ஸ்லோகங்களின் தமிழ் மொழியாக்கம் தெளிவாகவும், இன்பத் தேனாகவும் உள்ளது. இந்நூல் அழகிய வண்ண அட்டையுடனும், பிழை ஏதும் இன்றி தரமான அச்சும், மனத்தைக் கவரும் தனிச் சிறப்பும் கொண்டதாக உள்ளது. ஆத்மீக பாதையில் செல்ல விரும்புவோர் அனைவருக்கும் இது ஒரு பாராயண நூல்.