மகாவீரரும் வள்ளலாரும் (முதல்) வள்ளலாரும் பாரதியும் (வரை) (பதினோரு நூல்கள். சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம், தபால் பெட்டி எண்.2, வடலூர்-607 303. கடலூர் மாவட்டம். பக்கம்: மொத்தம் 1833. விலை: 11 நூல்களும் மொத்தம் ரூ.765.
தமிழகத்தில் தோன்றி, வள்ளலார் என்று அன்பர்களால் மிகுந்த பாசத்துடன் அழைக்கப்படும் வடலூர் இராமலிங்க சுவாமிகளின் அருமை, பெருமைகளை, நாளும் கூறி, சமரச சன்மார்க்க நெறியை அரும்பாடுபட்டு வளர்த்து வருபவர் ஊரன் அடிகள் ஆவார். இவர் தம் தொண்டுக்கு கட்டியம் கூற இப்பதினோரு நூல்கள் மிக அருமையான முறையில் வெளிவந்துள்ளன.
`மகா வீரரும் வள்ளலாரும்' என்ற நூலில், சமணர்களின் தமிழ்க் கொடை என்ற பகுதி (பக்.136-144) அனைவரும் படிக்க வேண்டிய ஒன்றாகும். வள்ளலாருக்கு நாலடியார் நூலின் ஈடுபாட்டை நூலாசிரியர் விளக்கும் பகுதி (பக்.145-151) அவரின் ஆராய்ச்சித் திறனுக்கு எடுத்துக்காட்டு.
`புத்தரும் வள்ளலாரும்' என்ற நூலில், பவுத்த தருமம் என்ற பகுதியில் நூலாசிரியர் விளக்கிக் கூறும் புத்த தருமங்களும் (பக்.40-53) மணிமேகலையில் புத்தர் புகழ் என்ற பகுதியில் விளக்கும் ஆராய்ச்சிக் குறிப்புகளும் (பக்.62-72) நூலாசிரியரின் நுண்ணறிவுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
`வள்ளுவரும் வள்ளலாரும்' என்ற நூலில் பதினெட்டு என்ற எண் ஒரு குழுஉக்குறியாக தமிழ் மரபு - வடமொழி மரபு ஆகிய இரண்டிலும் விளங்கிய தன்மையை நூலாசிரியர் விளக்குவதும் (பக்.31-39), திருவருட்பாவில் திருக்குறள் எனும் பகுதியின் செய்திகளும் (பக்.111-132) நூலாசிரியரின் ஆழ்ந்த, அகன்ற அறிவுக்குச் சான்றுகளாகும்.
`திருமூலரும் வள்ளலாரும்' என்ற நூலில், அன்னதானம், மகேசுவர பூஜை என்ற பகுதியில், திருமூலரின் பெருமையை விளக்குவதுடன், `ஆறிடும் வேள்ளி அருமறை நூலவர்' என்ற திருமூலர் பாடலுக்கு விளக்கம் கூறும் அழகு, ஊரன் அடிகளை போற்றிப் பாராட்ட வேண்டிய பகுதியாம் . (பக். 145-157).
`சம்பந்தரும் வள்ளலாரும்' என்ற நூலில், சம்பந்தரே முழு முதல்வர் என்பதை நூலாசிரியர் விளக்குமிடம் மிக மிக அருமை (பக்.78-82). சம்பந்தர் வள்ளலார் இருவரின் அனுபவ ஒற்றுமைகள் என்ற பகுதி படிக்கப் படிக்கத் தேனாக இனிக்கிறது (பக்.130-146).
`அப்பரும் வள்ளலாரும்' என்ற நூலில், `புகழ்ந்த கோமயத்து நீரால்' என்ற பெரிய புராணப் பாடலுக்கு நூலாசிரியர் கூறும் நுட்பமான பொருள் படிப்போர் இதயத்தை மகிழ்விக்கும் . (பக்.73-74) சிறு தெய்வ வழிபாட்டை அப்பரும் வள்ளலாரும் வன்மையாகக் கண்டிப்பதையும் இந்நூலில் படித்து உணரலாம் (பக்.122-144).
`சுந்தரரும் வள்ளலாரும்' என்ற நூலில், சுந்தரர் அருள்வாழ்வைத் தொகுத்து கூறுவதுடன் (பக்.24-25) அவர் செய்த அற்புதத்தையும் விளக்குகிறார் (பக்.103-114).
`மாணிக்க வாசகரும் வள்ளலாரும்' என்ற நூலில் மூவர் தேவாரம் - வேதசாரம் என்றும், திருவாசகம் - உபநிடதசாரம் என்றும் நூலாசிரியர் நன்கு விளக்குகிறார் (பக்.2-5); இருவரின் அனுபவ ஒப்புமைகள் படிப்பதற்குச் சுவையாக உள்ளன (பக்.154-205).
`தாயுமானவரும் வள்ளலாரும்' என்ற நூலில், சிதம்பர ரகசியம் (பக்.36-42), சும்மா இருக்கும் சுகம் (பக்.49-54), தேகசித்தி - மரணமிலாப் பெருவாழ்வு (பக்.60-69) என்ற பகுதிகள் தவறாமல் படிக்க வேண்டியவை ஆகும்.
`வள்ளலாரும் காந்தியடிகளும்' என்ற நூலில் வள்ளலாரும் காந்தியடிகளும் இறைவன் திருநாமப் பற்றில் உறுதி கொண்டிருந்தனர் என்பதை விளக்க வந்த நூலாசிரியர், ஆண்டாள் பாசுரத்திலும், திருமங்கையாழ்வார் பாசுரத்திலும் உள்ள பேர், நாமம் எனும் இரு சொற்களைக் கூறி,