ரவி பப்ளிகேஷன்ஸ், `ராஜ் கமல்,' 45 (21), 4வது அவென்யூ, அசோக் நகர், சென்னை-83. (பக்கம்: 136)
பேராசிரியர் டி.என்.கணபதி, 53 ஆண்டு காலம் பல்வேறு நிறுவனங்களில் மெய்யியல் (தத்துவம்) படிப்பித்த பழுத்த பட்டறிவாளர். இந்த நூல் அவரது பல ஆண்டு கால விரிவுரைகளின் குறுக்கம்.
இந்து மதம் என்பது மனிதச் சாத்தியப்பாடுகள் பற்றிய ஓர் அறிவியல் என்று ஜூலியன் ஹக்ஸ்லியைத் தன் முன்னுரையில் மேற்கோள் காட்டித் தொடங்குகிறார் ஆசிரியர். இந்து மதத்தைப் பற்றியும் இந்தியத் தத்துவ ஞானத்தைப் பற்றியும் அதிகம் அறிந்து வைத்திராத இளைய தலைமுறை இந்தியர்களுக்கு கண் திறந்து விடுதலே இந்நூலின் நோக்கம் என்றும் குறிப்பிடுகிறார். தன்னுடைய நோக்கத்தைச் செவ்வனே செயல்படுத்திக் கொள்ளும் வகையில் நூலை `இந்து சமயம், கொள்கையும் நடைமுறையும்' என்று ஒரு பகுதியாகவும் `இந்தியத் தத்துவ தரிசனங்கள்' என்று ஒரு பகுதியாகவும் பிரித்துக் கொண்டு பேசுகிறார்.
இந்து மதம் என்பது பல்வேறு கருத்து நிலைகளைத் தனக்குள் ஏந்தியிருக்கிற அகன்ற வெளி. அதன் பார்வையில் எல்லா மதங்களும் சமம். இந்த நிலைப்பாடு சர்வ தர்ம மத பாவனை என்று வழங்கப்படுகிறது என்று சொல்கிற ஆசிரியர், இந்து மதத்தின் இரண்டு பேரியல்புகளாக அதிகாரி பேதத்தை அது பேணுவதையும் விருப்பக் கடவுள் வழிபாட்டை அது அனுமதிப்பதையும் சுட்டுகிறார். வேதங்கள், உபநிடதங்கள், வேதாந்தங்கள், சுமிருதிகள், இதிகாசங்கள், புராணங்கள், ஆகமங்கள் ஆகியவற்றைப் பற்றிச் சுருக்கமான ஆனால், தெளிவான குறிப்புகளைத் தருகிறார்.
வர்ணதர்மம் பற்றிப் பேசும்போது, வர்ணத்தை நிர்ணயிப்பதில் குணம் தான் பிரதானமே அன்றிக் குலம், பிறப்பு அன்று; சமூக அசைவியக்கத்துக்கு அதில் இடமுண்டு; அது ஒரு திறந்த சமூக அமைப்பு; யாரும் நுழையலாம்; யாரும் வெளியேறலாம் என்று விளக்குகிறார் ஆசிரியர்.
ஆசிரம தருமம் பற்றிக் கருத்துரைக்கும்போது அந்நாளைய சமூகத்தில் பெண்களின் நிலையைச் சுட்டிக்காட்டுகிறார் ஆசிரியர். 16 வயதை எட்டும் வரையில் பெண்கள் வேதம் படிக்க அனுமதிக்கப்பட்டனர். ஆகவே, அவர்களுக்கு உபநயனம் உண்டு. குழந்தைத் திருமணம் கிடையாது. குழந்தைத் திருமணம் என்பது கி.பி.300க்குப் பிறகே வழக்கத்தில் வந்தது. விதவைத் திருமணம் அனுமதிக்கப்பட்டிருந்தது. கி.பி.500க்குப் பிறகே விதவைத் திருமணம் வழக்கொழிந்தது.
சடங்குகளைப் பற்றி இரண்டு விதமாகவும், கருத்துக்களை வைக்கிறார் ஆசிரியர். `சடங்காசாரத்தினுடைய சமூகச் செயல்பாடு என்பது, அது நம்பிக்கையுள்ளவர்களின் கூட்டம் ஒன்றை ஒன்றுபடுத்துகிறது என்பது தான். சமயக் குழுக்கள் சிதைந்து விடாமல் சடங்குகள் பாதுகாக்கின்றன."
"சடங்குகள் அவற்றின் உட்பொருள் தெரியாமல் செய்யப்படும்போது வெற்றுத் தோட்டாக்கள் ஆகிவிடுகிற அபாயமும் உண்டு. மேலும் சடங்கு பல்வேறு சமயங்களுக்கு இடையேயான ஒற்றுமைக்குத் தடையாகிறது." சித்தர்களைப் பற்றி ஆய்வு செய்து நூல்களும் வெளியிட்டு வரும் ஆசிரியர் இத்தகவலை கருத்துக்களை முன்வைக்கத் தகுதியானவர்தாம்.
உருவ வழிபாட்டை அடிப்படையாகக் கொண்டும், காணும் உலகில் காலூன்றியும், அன்பின் வழியது உயிர்நிலை என்று பேசியும் பேணியும் வந்த தமிழ்ப் பக்தி மரபின் பங்களிப்பு இந்த நூலில் பதிவு செய்யப்படாமலே போயிற்று என்பது ஓர் ஒச்சமாகவே தெரிகிறது.
நூலின் இரண்டாவது பகுதியான இந்தியத் தத்துவ தரிசனங்கள் என்ற பகுதியில் ஒவ்வொரு தத்துவ தரிசனத்தையும் விளக்குப் புகும்போது அவற்றுக்கு ஆசிரியர் தேர்ந்து கொண்டிருக்கிற தலைப்புகள் அருமையாக இருக்கின்றன. சார்வாகச் சுவை, சமணம் - ஓர் ஊடுநோக