புதிய புத்தக உலகம், 55-சி, வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 176)
பயண நூல்கள் வரிசையில் புதிய புத்தக உலகம் வெளியிட்ட இந்நூல் ஒரு புதுமையான வித்தியாசமான நூல். கர்நாடக மாநிலத்தில் உள்ள தலைசிறந்த புண்ணிய திருத்தலங்களில் எடையூர், பேளூர், ஹளேபீடு, அன்னபூரணி, சிருங்கேரி, கோகர்ணம், முருடீஸ், கொல்லூர், உடுப்பி, கட்டீல், தர்மஸ்தலம், சுப்ரமண்யா, சிரவணபெலகுலா, மேல்கோட்டை, ஷ்ரீரங்கப்பட்டிணம், சோமநாதபுரம், மைசூர், நஞ்சன்கூடு என 18 திருத்தலங்களைப் பற்றிய ஒரு முழுமையான வரலாற்றை ஆன்மிகச் செய்திகளோடு எழுதப்பட்ட நூல் இந்நூல். ஓரிடத்தில் உட்கார்ந்து பல்வேறு நூல்களை வைத்து குறிப்பெழுதி இந்நூல் தயாரிக்கப்படாதது ஒரு சிறப்பு. ஆம் ஆசிரியர் 18 திருத்தலங்களுக்கும் சேலத்திலிருந்து புறப்பட்டு தனது திருத்தல யாத்திரையில் கண்டவற்றையும் செவி வழி கேட்டவற்றையும் பல்வேறு நூல்களில் படித்துணர்ந்த செய்திகளோடு ஒப்பிட்டுப் பார்த்து இந்நூலைப் படைத்துள்ளார் சேலம் பா.அன்பரசு.
ஒவ்வொரு திருத்தலத்தில் இருந்து மற்றோர் தலத்திற்கு உள்ள தொலைவு, பயண வழி, காலம், பயண வழிப்படம், இயற்கை வனப்பு, பேரெழில், திருக்கோயில் வரலாறு, இறைத் திருமேனிகளின் சிறப்பு, இலக்கிய இதிகாச புராணச் செய்திகள், சிற்ப ஓவிய கட்டட அமைப்பு என ஒவ்வொரு திருத்தலத்திற்கும் ஆறு பக்கம் முதல் பதினாறு பக்கங்கள் வரை ஒவ்வொரு சின்னஞ்சிறு செய்திகளும் விடுபடாது பல படங்களுடன் பதிவு செய்திருப்பது ஆன்மிக சுற்றுலாப் பயணிகளுக்குப் பெரிதும் உதவக் கூடிய ஒரு வழிகாட்டியாக உள்ளது. ஏறத்தாழ இருபது நூல்களின் துணை கொண்டு ஒரு பயண நூல் இதுபோன்று இருத்தல் வேண்டுமென்ற பாராட்டுதலுக்குரிய வகையில் தயாரித்துள்ளார்.
நேர்த்தியான கட்டமைப்பு, உயரிய தாள். சுத்தமான ஒளி அச்சு, சொற்பிழை இல்லாப் புத்தகம். புத்தகத்தை ஒருமுறை படித்தாலே நேரில் சென்று வந்த புத்துணர்வு தானாக வந்து சேர்வது உறுதி.