தெளிவுரை: டாக்டர் எஸ்.ஜெகத்ரட்சகன்.வேமன் பதிப்பகம், 19, நியூ காலனி, ஜோசியர் தெரு, நுங்கம்பாக்கம், சென்னை-34. (பக்கம்: 400).
திருமாலின் திருவருளை பன்னிரு ஆழ்வார்கள் பாடி நெகிழ்ந்ததை திருநாத முனிகள் `நாலாயிர திவ்வியப்பிரபந்தம்' என்று தொகுத்து முறைப் படுத்தினார்.
800 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பிள்ளைப் பெருமாள் அய்யங்கார், `ஓம் நமோ நாராயணாய' என்னும் எட்டு எழுத்து மந்திரத்தின் பெருமையை எட்டு சிற்றிலக்கியங்களாகப் பாடி முடித்தார். திருவரங்கம், திருவேங்கடம், திருமாலிருஞ் சோலைமலை, 108 வைணவ திவ்ய தேசங்கள் பற்றியும் மனமுருகப் பாடியுள்ள பாடல்களுக்குத் தெளிவுரை தந்து இந்நூல் விளக்குகிறது.
திருவரங்கக் கலம்பகம், திருவரங்க மாலை, திருவரங்கத்து அந்தாதி, சீரங்க நாயகர் ஊசல் என்ற நான்கும் திருவரங்கத்துப் பள்ளி கொண்ட அரங்கநாதனைப் போற்றுகிறது. திருவேங்கடமாலை, திருவேங்கடத்து அந்தாதி என்ற இரண்டு திருமலை வேங்கடவனைப் பாடுகிறது. அழகர் அந்தாதி திருமாலிருஞ் சோலை கள்ளழகரைக் கசிந்து போற்றுகிறது. திருமாலின் 108 வைணவ திவ்ய தேசங்களை `நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி' அழகுறப் பாடி வணங்குகிறது.
`உடுக்கும் உடைக்கும், உணவுக்குமே உழல்வீர்! இனி நீர், எடுக்கும் முடைக் குரம்பைக்கு என்செய்வீர்?... வேங்கட வெற்பர்... அவர்க்கு ஆட்படுமின்' என்று திருவேங்கடத்து அந்தாதியில், வேங்கடமுடையானைப் போற்றாமல் உடைக் கும், உணவுக்குமாக அலைந்து வீணே உடலைச் சுமக்கிறீரே என்று திவ்யகவி கேட்கிறார். தலைப்புகள் அங்கங்கே பாடலுக்கு முன் 108 திவ்ய தேசங்களைக் குறிப்பதாகவும், பாடல்களைச் சற்று பெரிய எழுத்திலும் அச்சிடப்பட்டிருந்தால் யாவரும் எளிதில் படிக்க இனிதாய் இருந்திருக்கும். இது திருமாலின் திருவருள் காட்டும் வைணவ இலக்கிய நூல்!