தமிழினி, 67, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 126).
"யான் பெற்ற இன்பம் பெறு இவ்வையகம்", "ஒன்றே குலம் ஒருவனே தேவனும்", "யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னு ரை தானே" என்னும் திருமந்திர மொழிகளை அருளிய திருமூலரை, "சித்தன் என்பவன் கட்டமைப்புகளின் எதிரி. அவன் சமயங்களுக்குள்ளும் சித்தாந்தங்களுக்குள்ளும் அடைபடாதவன்" என்று சித்தர்களை வரையறுக்கிற முயற்சி கட்டுப்படுத்துமா என்பதை ஆராய்கிறது இந்நூல்.
"பவுத்தம் தமிழகத்துக்கு வந்தது. செல்வாக்கோடு நின்றது. பவுத்தத்தின் பின்னோடு சமணமும் வந்தது. தமிழனுடைய வழிபாட்டு நெறிகளுக்குப் புறப்போட்டிகள் வந்து விட்டன. தமிழன் தன்னுடைய வழிபாட்டு நெறிகளையும், மெய்யியல் கொள்கைகளையும் வரையறுத்துக் கட்டமைக்க வேண்டிய கட்டாயத்துக்குக் காலம் அவனை உந்தித் தள்ளியது. காலத்தின் குரலாகச் சைவத்தின் படியாளாகத் திருமூலன் என்ற தமிழன் கிளம்பினான்... சைவ சித்தாந்தம் என்ற மெய்யியற் கொள்கைக்குக் கால்கோள் செய்து கட்டமைத்தான்" (பக்.11) என்று கூறும் நூலாசிரியர் திருமூலர் சித்தரா? திருமூலரின் மெய்யியல், சமயம், சமூகநல நோக்கு என்று விரிவாக எழுதி இறுதியில் பிற்காலச் சித்தர்களினின்றும் முற்காலச் சித்தரான திருமூலர் வேறுபட்டவர் என்பதை நிறுவியுள்ளார் நூலாசிரியர்.
"ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை" என்ற பாடல் திருமந்திரத்தின் காப்புச் செய்யுளாக இருந்தபோதிலும் அது பிற்சேர்க்கை என்று நிறுவியுள்ளதும், `நீரை' முதன்மையாகக் கருதுகிற சமயத்தார் பற்றிய ஆய்வும் புதுமை. திருமூலரின் மெய்யியல் கோட்பாடுகளையும் அலசும் இந்நூல் ஆய்வாளர்களுக்கு மட்டுமின்றி ஆன்மிக, இலக்கிய அன்பர்களுக்கும் பயன்படக் கூடிய ஆய்வு நூல்.