கங்கை புத்தக நிலையம், 13, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 216. விலை: ரூ.70)
மானுட வாழ்வின் எதார்த்தமான போக்கை, சூழ்நிலை காரணமாய் அமையும் குண விசித்திரங்களை, வறுமை நிலையின் அவலங்களை மையப்படுத்தி, ஒவ்வொரு சிறுகதையையும் ஒவ்வொரு குறும்படம் போல நமக்குத் தம் எழுத்தின் மூலம் பதிவு செய்து காட்டும் சிறந்த எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி. மனித நேயம், அன்பின் ஒளி இவையே அவரது கதைகளின் அடித்தளமாக இலங்குகின்றன. அவர் பல்வேறு இதழ்களில் எழுதி, சிறந்த பரிசுகள் பெற்ற கதைகள் உட்பட பத்து முத்தான கதைகளின் தொகுதி நூல் இது.
கடைசியாக இடம் பெற்றுள்ள `மின்சாரப் பூ' நூலின் சரி பாதிக்கு மேற்பட்ட பக்கங்களில் அமைந்திருந்தாலும் அதை நாவல் என்றோ, குறுநாவல் என்றோ குறிப்பிடாமல், `சற்றே பெரிய சிறுகதை' என்று குறிப்பிட்டுள்ளார் ஆசிரியர்.
`அன்பெழுத்து' கதையில், சிகரெட் பழக்கத்தைக் கைவிட முடியாமல் தவித்து, மனைவியின் அன்பான அதிரடிச் செய்கையால் திருந்தும் சொர்ணச்சாமி பாத்திரம் வேறுயாருமல்ல; தானே தான் என்கிறார் பொன்னுசாமி. தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு சிறப்புத் தன்மையுடன் மிளிர்கின்றன.